சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் மீண்டும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் இடம்பெறும் என்றும், இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணாவின் அமைச்சரவையில் பங்குபெற்றிருந்தபோது,  அனைத்து அரசு பேருந்துகளிலும் இடம் பெற வேண்டும் என்றும் திருவள்ளுவரின் படமும் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி,  அனைத்து மாநகர, தொலைதூர அரசு பேருந்துகளில் (Government Bus) திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள்கள் (Tirukkural) இடம் பெற்ற வந்தது. அதன்படி பேருந்துகளில் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் வைக்கப்பட்டன.

ஆனால் பின்னர் வந்த அதிமுக ஆட்சிகளில், அவை அகற்றப்படுவதும், பின்னர் திமுக ஆட்சியின்போது மீண்டும் வைக்கப்படுவதும் தொடர்கதையாகி வந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மற்றும் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து,  முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி அனைத்து போக்குவரத்து கழக பஸ்களிலும் திருவள்ளுவர் படம், திருக்குறள், மற்றும் அந்த குறளுக்கான விளக்கவுரையும் பயணிகள் பார்வையில் எளிதில் தென்படும் வகையில் இடம் பெற வேண்டும் என்றும் எந்த குறள் இடம் பெற வேண்டும் என்பதை நான் தேர்வு செய்து தருகிறேன்’ என்று அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதன் மூலம் அனைத்து அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் படம் விரைவில் காட்சி அளிக்கும் என்றும், திருக்குறளும், அதன் விளக்கவுரையும் பஸ்களை மீண்டும் அலங்கரிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.