அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்,  திருவலஞ்சுழி,  தஞ்சாவூர் மாவட்டம்.

மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பார்கடலில் அமுதம் கடைந்தனர். வாசுகியானது மந்திர மலையின் பாரம் தாங்காமல், தனது கொடிய விஷத்தைப் பாற்கடலில் கக்கியது. அதன்படி கக்கப்பட்ட ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காது தேவர்களும் அசுரர்களும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். ஈசன் அவர்களிடம், எந்த செயல் செய்யும் முன்பு விநாயகரை வழிபட வேண்டும். எனவே நீங்கள் விநாயகப் பெருமானை வழிபட்டால் தடையின்றி அமுதம் கிடைக்க பெறுவீர்கள் என அருளினார்.

தேவர்களுடன் அசுரர்களும், பாற்கடலை அடைந்து கடல் நுரையினை சேர்த்து விநாயகர் வடிவமாக செய்து வழிபட்டனர். அதன்பின் பாற்கடலைக் கடைந்து, அமுதம் கிடைத்து மகிழ்ந்தனர். விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் “சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்)” எனப் பெயர் பெற்றார். தேவர்களினால் தோற்றுவிக்கப்பட்டமையால் இவ்விநாயகர் தேவர்களின் ஆத்மார்த்த பூஜா மூர்த்தியாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

தேவேந்திரன் அகல்யையால் ஏற்பட்ட சாபத்தை போக்கிக் கொள்ளும் பொருட்டு, விநாயகரை கையில் எடுத்துக் கொண்டு, பூலோகத்தில் உள்ள சிவ தலங்களைத் தரிசனம் செய்துவிட்டு இத்தலத்திற்கு வந்தடைந்தார். அப்போது சுவேத விநாயகர் இந்த தலத்திலேயே தங்க விருப்பம் கொண்டு, சிவனை வேண்டினார். எனவே, இத்தலத்து சிவன், ஒரு சிறுவன் வடிவில் இந்திரன் முன்பு வந்தார். இந்திரன், விநாயகர் இருந்த பெட்டியை, சிறுவன் கையில் கொடுத்து, “நான் சிவபெருமானை வழிபட்டு வரும்வரை கையில் வைத்திரு” என்று கூறி சென்றார். சிறுவனாக வந்த சிவன், இந்திரன் சென்ற பிறகு விநாயகரைத் தரையில் வைத்துவிட்டு மறைந்தார்.

இந்திரன் சிவனை வணங்கிவிட்டுத் திரும்பி வந்தார். சிறுவனை காணாது தேடி அலைந்த அவன், பலி பீடத்தின் அடியில் விநாயகர் இருந்ததைக் கண்டு, கையில் எடுக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. எனவே, விநாயகர் இருக்குமிடத்தை சுற்றிலும், விஸ்வகர்மாவை கொண்டு, இந்திர இரதம் செய்து இந்திரலோகம் இழுத்து செல்ல முயன்றான். அப்போது, விநாயகர் அசரீரியாகத் தோன்றி, “நீ வருடம் ஒரு முறை சதுர்த்தியன்று வந்து எம்மை பூஜை செய்தால், வருடம் முழுவதும் பூஜை செய்த பயனை அடைவாய்” என்று கூறினார்.

இந்திரனும் மனம் மகிழ்ந்து அதன்படி வருடம் தோறும் ஆவணி மாதம் விநாயக சதுர்த்தியன்று இங்கு வந்து விநாயகரைப் பூஜை செய்து அருள் பெற்று செல்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. சுவேத விநாயகர் பாற்கடல் நுரையினால் செய்யப்பட்டவர் என்பதால் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆடை, சந்தனம், மலர்கள் ஆகியவைகளும் சாத்தப்படுவதில்லை. அபிஷேகத்திற்கு பதிலாகப் பச்சைக் கற்பூரம் மட்டுமே பொடி செய்து, திருமேனியில் கைபடாமல் தூவப்பட்டு வருகிறது.

முருகனுக்கு ஆறு படை வீடு இருப்பதுபோல விநாயகருக்கு இந்தியா முழுவதும் 10 படை வீடுகள் உள்ளன. அதில் இத்தலமும் ஒரு படை வீடு என்பது சிறப்பு. மகாவிஷ்ணுவின் நேத்திர கமலங்களிலிருந்து தோன்றிய இந்திரதேவியாகிய கமலாம்பாளையும், பிரம்மாவின் வாக்கிலிருந்து தோன்றிய புத்தி தேவியாகிய வாணியையும் இத்தலத்தில் சுவேத விநாயகப் பெருமான் திருமணம் செய்துகொண்டார். எனவே திருமணம் தடை படுபவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டியவர்களும் இங்குள்ள சுவேத விநாயகப் பெருமானை வழிபட்டால் தாங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பது நம்பிக்கை.

மகாகணபதியின் கருணையினாலேயே அகஸ்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து வெளிப்பட்ட காவிரி அன்னை சோழ நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி அறிந்த சோழ மன்னன் ஹரித்துவஜன் தனது பரிவாரங்களுடன் சென்று, காவிரி அன்னையை வழிபட்டு எதிர்கொண்டு அழைத்து வந்தான். சக்திவனம் எனப்படும் இத்தலத்திற்கு வரும்போது இங்குள்ள சிவனை காவிரி அன்னை வலம் வந்து வழிபட்டு ஈசான்ய பாகத்தில் உள்ள பிலத்துவாரத்தின் வழியாக வலம் சுழித்த வண்ணம் உட்புகுந்தாள். இதைக் கண்ட மன்னர், பலவித யுத்தி உபாயங்களை மேற்கொண்டும் பிலத்துவாரம் அடைபடாமல் போனது.

உடனே அருகில் உள்ள கொட்டையூர் என்ற ஸ்தலத்தில் தவம் இயற்றி வந்த ஹேரண்ட மகரிஷி என்ற முனிவரிடம் சென்று மன்னன் முறையிட்டான். இதைக் கேட்ட முனிவரும் திருவலஞ்சுழி வந்தடைந்து சிவனை வழிபட்டு பிலத்துவாரம் அடைபட்டு, காவிரி மீண்டும் மேலெழுந்து ஓட வேண்டினார். அப்போது சிவன் அசரீரியாக தோன்றி, “சடையுடன் கூடிய முனிவரோ அல்லது முடியுடன் கூடிய மன்னரோ ஒருவர் இந்த பிலத்துவாரத்தினுள் புகுந்தாலொழிய காவிரி அடைபடாது” என்றார்.

அழகான கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் வலப்பக்கம் திருமணக் கோலக்காட்சி தருகிறர். இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்புவாய்ந்த மூர்த்தம்.

இங்குள்ள பைரவ மூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவராக விளங்கியமையால் அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப்பட்டுள்ளதாகச் செல்லப்படுகிறது. சனீஸ்வரர் சந்நிதி உள்ளது.