வேலூர்: தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இன்று (21ந்தேதி) கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நள்ளிரவு முதலே வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேலும், செப்டம்பர் 22ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இன்று (செப்.21) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.