சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் திருப்புகழ் கமிட்டி மீண்டும் ஆய்வு செய்யும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கிய நிலையில், பெய்த 2 நாள் மழைக்கு சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது. இருந்தாலும், மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, இரவோடு இரவாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இருந்தாலும், வடசென்னை உள்பட சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. அதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் மற்றும் மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுடன், மழைநீர் தேங்கிய சென்னையில் எழும்பூர் வேலப்பன் தெரு, மாண்டியத் சந்து, மன்னடி, தங்கசாலை தெரு, கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், சில இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதற்கு நிநந்தர தீர்வு காண வல்லுநர் குழு மீண்டும் சென்னையில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது. திருப்புகழ் கமிட்டி இரண்டு பிரிவினராக பிரிந்து மீண்டும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
சென்னையில் திரு.வி.க நகர், கொளத்தூர் தொகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளை ஒப்பிடும்பொழுது வடசென்னை பகுதியில் இயற்கையாக நீர் செல்ல ஓட்டேரி நல்லா கால்வாய் மட்டுமே உள்ளது. அதிக மழை பொழிவு ஏற்படும் பொழுது இந்த கால்வாயில் தண்ணீர் மட்டம் உயர்வதால் தண்ணீர் வடிவதில் தாமதம் ஆகிறது. இதனை தவிர்க்க, ஓட்டேரி நல்லா கால்வாய் மட்டுமின்றி வேறு வழியில் கால்வாய் எடுத்தச் செல்ல முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஓட்டேரி நல்லா கால்வாய் விரிவுபடுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், வரும் காலங்களில் தண்ணீர் தேங்கக் கூடாது என்பதற்காக தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சென்னையில் கடந்த மழையில் தண்ணீர் தேங்கிய இடங்களை ஒப்பிடுகையில் தற்போது 90% இடங்களில் தண்ணீர் வெளியேறிவிட்டது. சென்னையில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாத பகுதிகளில் புதிதாக சாக்கடை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழை முடிந்ததும் மீண்டும் மீதமுள்ள பணிகளை தொடங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.184 கோடி ஒதுக்கி தமிழகஅரசு உத்தரவு…