டெல்லி: நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக 7 குற்றவாளிகள்  தண்டனை அனுபவித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், பேரறிவாளன் ஒருவர்  மட்டுமே கடந்த மே 18-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என மற்ற 6 குற்றவாளிகளும்,  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்படும் என அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,  வழக்கை அடுத்த வாரம் வெள்ளிக் கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.