திருப்பாவை –8ஆம் பாடல்

ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார்.   இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.

இன்று நாம் திருப்பாவை 8 ஆம் பாடலைக் காண்போம்

திருப்பாவை 8 :

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!

 

பொருள் :

கிழக்குத் திசையில் உள்ள அடிவானம் வெளுத்துவிட்டது!எருமைகள் பனிப்புல் மேய சிறு தோட்டங்களில் பரவி நிற்பதை பார்! .

நீராட வந்த பெண்களைத் தடுத்து நிறுத்தி,உன்னை அழைத்துச்செல்ல உன் வாசலில் வந்து கூவிக் கூவி அழைத்து உனக்காகக் காத்திருக்கிறோம்.

என்றும் உற்சாகமாக இருக்கும் அழகுச்சிலை போன்ற பெண்ணே !எழுந்திடு !

கண்ணனின் புகழைப் பாடி,அவனிடம் இருந்து நாம் விரும்பும் பரிசைப் பெற,நாம் நோன்பு மேற்கொள்வோம் வா.

கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும்,கம்சனால் அனுப்பப்பட்ட மல்யுத்த வீரர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கண்ணனை நாம் வணங்கினால், அவன் ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் புரிவான்.பெண்ணே! இதை நினைவில் கொண்டு, உடனே நீராட கிளம்பு!