திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.

இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சன்னிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.

இக்கோவிலின் கம்பத்தடி இம்மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சன்னிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் மோகூர்

1763 ஆண்டில், கர்நாடகப் போர் நடைபெற்ற காலத்தில், ஆங்கிலேயர் படையெடுப்பின் போது, ஆங்கிலேய கர்னல் ஹீரான் என்பவன் இக்கோயிலிலுள்ள இறைவன் திருமேனி, பொன் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்தான். இவற்றை ஒட்டகத்தில் ஏற்றி திருச்சி சென்றுகொண்டிருந்த போது, இவனுடன் கள்ளர் மரபினர் போர் செய்து, ஆங்கிலேயப் படையை வென்று, எல்லாவற்றையும் மீட்டு வந்தனர். இதில் பல ஆங்கிலேய சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள்.

இதனை நினைவூட்டும் வகையில் இறைவன் கள்ளர் திருக்கோலத்தில் பவனி வருகின்றார். மேலும், இதற்காகக் கோயிலின் தேர் இழுக்கும் உரிமை கள்ளர் மரபினரின் திருமோகூர், பூலாம்பட்டி, கொடிக்குளம், சிட்டம்பட்டி, வௌவால் தோட்டம், ஆளில்லாங்கரை கிராமத்தார்களுக்கு வழங்கப்பட்டது.

போக்குவரத்து

இந்த கோயிலுக்கு மதுரையில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.