மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது மீண்டும் பிரியாணி என பரவிய போஸ்டர் ‘வதந்தி’  என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை விவகாரத்தில்,  அந்த போஸ்டர் வதந்தி என்றும், அதை பாஜகவே சமூக வலைதளங்களில் பரப்பியது என்றும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் கண்டறிந்துள்ளது. அதுபோல குறிப்பிட்ட ஜமாத்தும், நாங்கள் அதுபோல போஸ்டர் ஏதும் வெளியிடவில்லை  மறுப்பு தெரிவித்து உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளியிட்டதாக போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போஸ்டரை  தமிழக பா.ஜ.க  தனது சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு கேள்வி எழுப்பியது. தமிழக பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளியிட்டிருப்பதாக அந்த போஸ்ர்  பகிரப்பட்டது.  அப்போஸ்டரில், “மதுரை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை ஹஜரத் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலில், மத வழிபாட்டு உரிமையை காக்க, சிக்கந்தர் மலையில் ஆடு, கோழி அறுத்து சமூக நல்லிணக்கத்திற்கான சமபந்தி விருந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெறும் இந்த விருந்தில் மதுரை வாழ் அனைத்து மத சகோதரர்களும், இஸ்லாமிய சகோதரர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு  இந்து முன்னணி உள்பட பல செய்தி நிறுவனங்களும் இந்த போஸ்டர் குறித்து செய்திகள் வெளியிட்டன. இதனால், அந்த பகுதி மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அந்த போஸ்டர்  போலியானது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்லாமிய அமைப்பினர் இது போன்ற போஸ்டர் எதுவும் வெளியிடவில்லை எனவும், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க வதந்தி பரப்புவதாகவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த உண்மைத் தன்மையை தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இக்குழுவினர், சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஜமாத்தின் மறுப்பு அறிக்கையையும் குறிப்பிட்டுள்ளனர்.

 

[youtube-feed feed=1]