ஈரோடு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் மாரடைப்பு காரணமாக நேற்று மதியம் உயிரிழந்தார். அவரது உடல் இன்று ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, ஈரோட்டில் உள்ள மின் மயானத்துக்கு திருமகன் ஈவெரா உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கே.வி. தங்கபாலு, அமைச்சர் சு. முத்துசாமி, ஜோதிமணி எம்.பி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா (46). இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன் ஆவார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், சமணா என்ற மகளும் உள்ளனர் இவர், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர், கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறையின் தலைவராக பதவி வகித்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் தங்கி வழக்கம்போல் தொகுதி பணிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதற்காக தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது, எம்.எல்.ஏ. உடல் கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மேலும் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. இறந்த தகவல் கிடைத்ததும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் ஈரோட்டுக்கு வந்தார். அங்கு தனது மகனின் உடலை பார்த்து இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதைப்பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் கதறி அழுதனர்.
இதைத்தொடர்ந்து, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் கார் மூலம் ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் திருமகன் ஈவெரா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, காந்தி, மதிவேந்தன், எம்.பி.க்கள் கனிமொழி, விஜய் வசந்த், அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, செல்வக்குமார், ஏ.ஜி.வெங்கடாசலம் மற்றும் தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்பட பலர் மற்றும்,, கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு மற்றும் முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று திருமகன் ஈவேரா உடலுக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். தொகுதி மக்கள் வரிசையில் காத்திருந்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இன்று மதியம், இறுதி சடங்குகள் நடந்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் சாலை மார்க்கமாக ஊர்வலமாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மின்மயானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிற்பகலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.