சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து போராட்டங்களுக்கும் சுற்றுச்சுவருக்குள்தான் நடத்தப்படுகிறதா? இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா என தமிழகஅரசுக்கு ஆர்எஸ்எஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.  மேலும் தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தொடர்பான வழக்கில்,  கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள, காவல்துறை அனுமதியை ஏற்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த  உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், கடந்த முறை  நீதிமன்றம் தெரிவித்தபடி, ஜனவரி 29ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை சுட்டிக்காட்டி அந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுதந்திரமான முறையில் விண்ணப்பம் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். அந்த விண்ணப்பங்களை சுதந்திரமான முறையில் பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா,  ல் அனைத்து போராட்டங்களுக்கும் சுற்றுச்சுவருக்குள்தான் நடத்தப்படுகிறதா?  எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர், ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில்மனு தாக்கல் செய்ய காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.