திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாள் கோயில்.

ஸ்ரீ திருமாமகள் தாயார் ஸமேத ஸ்ரீ க்ருபா சமுத்ர பெருமாள் {ஸ்ரீ தலசயன பெருமாள், ஸ்ரீ அருள்மாகடல்} கோவில், திருச்சிறுபுலியூர் திவ்யதேசம், திருவாரூர் மாவட்டம் .
திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாள் கோயில்.
திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும்.
தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின்
மூலவர் பெயர் :-
ஸ்தலசயனப்பெருமாள்.
தாயார் பெயர் :-
திருமாமகள் நாச்சியார்.
உற்சவர் பெயர் :-
க்ருபா சமுத்ரப் பெருமாள் (அருள்மாகடல்).
உற்சவ தாயார் பெயர் :-
தயாநாயகி.
கருவறையில் எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வ்யாசர், வ்யாக்ரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார்.
மூலவர் :-
அருள்மாக்கடல் அமுதன்
சிதம்பரம் நடராஜர் அருளியபடி வ்யாக்ரபாதர், திருச்சிறுபுலியூர் ஸ்தல சயனப்பெருமாளை வணங்கி மோக்ஷம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.
மூலவர் :-
அருள்மா கடலமுதன் பாலசயனம்.
திரு நாபியில் ப்ரம்மன், திருவடிகளில் கண்வ முனிவர், புலிக்கால் முனிவர் அமர்ந்திருக்கிறார்கள்.
உற்சவர் :-
க்ருபா சமுத்ர பெருமாள்.
தாயார் :-
திருமாமகள் நாச்சியார்.
தீர்த்தம் :-
திருவனந்த புஷ்கரணி,
மானஸ் புஷ்கரணி.
விமானம் :-
நந்தவர்தன விமானம்.
ஸ்தலவ்ருக்ஷம் :-
வில்வம்.
ஸ்தல வரலாறு :-
ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டு ஒன்றோடொன்று போரிட தொடங்கின.
கருடனுடைய வீரத்தை கண்டு பயந்த ஆதிசேஷன் பல இடங்களில் ஓடித் திரிந்து கடைசியில் இத்தலத்தை அடைந்து புஷ்கரணியில் திருமாலைக் குறித்து தவம் செய்தது. ஆதிசேஷனுக்கு அபயம் தந்து தன்னுடைய திருவணையாக உண்டு செய்வித்தார்.
கருடன், ஆதிசேஷனைத் தேடி இங்கு வந்தபோது, திருமாலின் சயனமாக ஆதிசேஷன் மாறி இருப்பதைக் கண்டு ஒன்றும் செய்யாமல் விக்கித்து போனான்.
அப்போது ஆதிசேஷன், ‘கருடா சௌக்யமா!’ என்று கேட்க, ‘இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்யம்’ என்று கருடன் சொல்லிவிட்டு சென்றதாக வரலாறு.
சிதம்பரத்திலுள்ள நடராஜப் பெருமானிடம் வ்யாக்ரபாத முனிவர் தனக்கு மோக்ஷம் வேண்டும் என்று கேட்க, நடராஜப் பெருமான், முனிவரை இந்த திருத்தலத்திற்கு சென்று திருமாலை நோக்கி தவம் செய்தால், ஸ்ரீவைகுண்ட பதவி கிடைக்கும் என்று சொன்னார்.
வ்யாக்ரபாத முனிவரும் இங்கு வந்து தவம் செய்து மோக்ஷ நிலையை அடைந்தார்.
அதனால் இத்தலத்திற்கு சிறுபுலியூர் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
புஜங்க சயனத்தில் மிகச்சிறிய உருவத்தில் எம்பெருமான் அருள் பாலிக்கிறார்.
சூர்யன், அனந்தன், துர்வாசர், மணவாள மாமுனிவர் ஆகியோர் திருமாலை வழிபட்டு தர்சனம் பெற்றவர்கள்.
பரிஹாரம் :-
நாகதோஷம் உள்ளவர்கள் தங்கள் தோஷத்தை நிவர்த்தி செய்யவும், புத்ர பாக்யம் இல்லாதவர்கள் புத்ர பாக்யம் பெறவும் குடும்பத்தில் உள்ள பகை குறைந்து நல்லபடியாக வாழ விரும்புவோர்க்கும், கோர்ட் விஷயங்களில் சாதகமான தீர்ப்பு பெறவேண்டும் என்று துடிப்பவர்களுக்கும் இந்த ஸ்தலம் நன்மைகளை அள்ளித் தருகிறது.
நிர்பயமாக வாழ வேண்டுவோர், எதிரிகளால் ஆபத்து ஏற்படக் கூடாது என்பவர்கள் இங்கு வந்து மூன்று நாள் தங்கி எம்பெருமானை ப்ரார்த்தனை செய்தால் போதும். நற்பலன்களை அடைவார்கள்.
ஸ்தல சிறப்புகள் :-
திருமங்கை ஆழ்வாருக்காக பெருமாள் மிகச் சிறிய வடிவில் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டுள்ளார்.
புஜங்க சயனத்தில் மிகச் சிறிய உருவமாயிருந்ததைக் கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட உமது குறை தீர நமது மிகப்பெரிய உருவை திருக்கண்ணமங்கையில் காணும் என்று பெருமாள் அருளிச்செய்த ஸ்தலம். கருடனுக்கு பெருமாள் அபயமளித்த ஸ்தலம்.
இங்கு பூமிக்கு கீழ் கருடாழ்வார் சன்னதியும், மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்கும் சன்னதி உள்ளது.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட்ட திவ்ய ஸ்தலமாகும்.
நாக தோஷ நிவர்த்திக்கும் மற்றும் மக்கட்பேற்றுக்கும் இத்தலத்திற்கு தனிப்பெருமை உண்டு.
இத்தலத்தின் எம்பெருமானை பூஜித்து வைகுந்தம் அடைந்த வ்யாக்ரபாதரை, எம்பெருமானின் திருவடிகளுக்கு அருகிலேயே ப்ரதிஷ்டை செய்துள்ளனர்.
அமைப்பு :-
ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம், பலி பீடம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன.
அடுத்து உட்கோபுரமான சிறிய கோபுரம் உள்ளது.
மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், பெருமாள், விஷ்ணு துர்கை ஆகியோர் உள்ளனர்.
விஷ்வக்சேனர் உள் திருச்சுற்றில் உள்ளார்.
மூலவர் சன்னதி முன், வலது புறம் பள்ளியறை உள்ளது.
வெளித்திருச்சுற்றில் ஆண்டாள் சன்னதி, பால ஹனுமான் சன்னதி, திருமாமகள் தாயார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, யாகசாலை, திருமடப்பள்ளி, திருவாய்மொழி மண்டபம் ஆகியவை உள்ளன.
திருவிழாக்கள் :-
வைகுண்ட ஏகாதசி. வைகாசி மாதம் ப்ரம்மோற்சவம். ஐப்பசி மாதம் மணவாள மாமுனி விழா. மாசி மாதம் அனந்தாழ்வார் விழா