பசுபதீஸ்வரர் ஆலயம்,தின்னக்கோணம்

திருச்சி, – முசிறி மார்க்கத்தில் குணசீலம்-ஆமூர் போகும் வழியில், ஆமூரிலிருந்து 10 கி.மீ. தூரத்த்தில் உள்ள கிராமம் தின்னக்கோணம். முசிறி லால்குடியிலிருந்து பஸ் வசதி இருக்கிறது. முசிறியிலிருந்து வேளக்கா நத்தம் சாலையில் சென்று – ஏவூர் என்னுமிடத்தில் பிரியும் சாலையில் சென்றால் நாச்சம்பட்டியை அடுத்து “தின்னகோண”த்தை அடையலாம். முசிறியிலிருந் 15 கி.மீ. நகரப் பேருந்து செல்கிறது.

ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு திரு நற்குன்றம் என்று ஒரு சிவ ஸ்தலம் இருந்தது. இங்கு என்ன விசேஷம் என்றால் சிவன் ஸ்வயம்பு லிங்கம் அல்ல. ஸ்வயம்பு பசுமாடு உருவம். அதனால் சிவனுக்கு பசுபதீஸ்வரர் என்று பெயர் (பழைய பெயர் சடனாண்டார்)  7.5 அடி அகலம் 3அடி உயரம். ஒரு கருப்பு பசுமாடு படுத்துக்கொண்டு நம்மை பார்ப்பதுபோல் ஒரு தோற்றம். பராந்தக சோழன்கால கஜ ப்ரஷ்ட கர்பகிரஹம். இடையர்கள் வசித்ததால் நிறைய பசுக்கள் இருந்த ஊர். எல்லா பசுவிடமும் பால் இருந்தது. ஒரு பசு தினமும் பால் இன்றி இருந்தது. ஏன்? தினமும் ஒரு புற்று மேடு மேல் பாலை சொறிந்து விட்டு வருகிறதே. இதை கண்ட இடையன் தடியால் பசுவை கோபமாக அடிக்க பசு இறந்து விட்டது.

அன்று இரவே பராந்தக சோழன் கனவில் சிவன் தோன்றி ”பராந்தகா, நீ நெற்குன்றம் போ. அங்கே ஒரு பசு பால் சொறிந்து அடிபட்டு இறந்த இடத்தில் ஒரு சிவாலயம் கட்டு’ என ‘ கட்டளை இட்டார். அதே நேரத்தில், பார்வதிக்கு ஒரு சாப விமோச்சனம் ஆவதற்காக, ”உமா நீ நற்குன்றம் செல். அங்கே ஒரு சிறு குன்று பசுபோல் உருவில் போல் இருக்கும் அதற்கு பூஜை வழிபடு” என்கிறார். அந்த பசு உருவ சிறிய குன்று தான் இப்போது பசுபதீஸ்வரர் கோவிலாக பராந்தக சோழனால் கட்டப்பட்டது. கோவில் சிதிலமடைந்து அதன் பெயரும் சிதைந்து நற்குன்றம் திரு நெற்குன்றம் ஆகி, சுருங்கி இப்போது தின்னக் கோணம். தூண்கள் சிற்ப வேலைப்பாடு நிறைந்தவை. சகல தோஷ நிவாரணத்திற்கு, பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள்.

பசுபதீஸ்வரர் பார்ப்பதற்கு வெகு அழகான பசுவாக சாதுவாக இருக்கிறார். பசுவுக்கு நெற்றியில் திருநீற்றுப்பட்டை, நிறைய மாலைகள், ஆபரணங்கள் வஸ்திரங்கள் உடலை சுற்றி சார்த்தி படுத்திருந்தால் எப்படி இருக்கும். அது தான் ஸ்வயம்புவாக பசு உருவில் காட்சி தரும் பசுபதீஸ்வரர். சமீபத்தில் புனருத்தாரணம் செய்த ஒரு கோவில். அம்பாள் கோவிந்தவல்லியின் பழைய பெயர் கல்வெட்டில் சிவகாமி

இன்னொரு விஷயம். கோணம் என்றால் சக்ரம், யந்திரம். சூரிய பகவான் மூன்று கோண சக்திகளுடன் திகழ்கிறார் அல்லவா ? கன்னி கோணம், தின்ன கோணம், பரிதி கோணம் என்று மூன்று கோண சக்திகளையும் சூரிய பகவான் மூன்று சிவ மூர்த்திகளை தரிசனம் செய்தே பெறுகிறார். அதாவது காலையில் சூரிய உதயத்தின்போது ஆமூர் ஸ்ரீரவீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை வணங்கி கன்னி கோண சக்திகளையும், நண்பகல் ஸ்ரீபசுபதீஸ்வரரை தின்னகோணத்தில் வணங்கி தின்ன கோண சக்திகளையும் மாலை அஸ்தமன நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பரிதிநியமம் திருத்தலத்தில் அருள்புரியம் ஸ்ரீபரிதியப்பரை வணங்கி பரிதி கோண சக்திகளையும் பெறுகிறார் என்று ஒரு ஐதீகம்.

நட்சத்திரங்களுள் சிறந்தது மூல நட்சத்திரம் என்பார்கள். ஹனுமான் நக்ஷத்ரம். முகூர்த்தங்களுள் சிறப்பானளது அபிஜித் முகூர்த்தமாகும். அபிஜித் கால அளவு கிடையாது, ஒரு கோண சக்தி என்பது சித்தர்கள் கூறும் இரகசியத்திலும் இரகசியமான தெய்வீக உண்மையாகும். எப்படி அபிஜித் நட்சத்திரம் என்பது ஜோதிட ரீதியாக கணக்கிட முடியாததாக உள்ளதோ அதுபோல அபிஜித் முகூர்த்த நேரத்தையும் கால அளவால் உறுதியாக கணிக்க முடியாது என்பதே உண்மை.

சுயம்பு மூர்த்தியாக தின்னக்கோணத்தில் விளங்கும் ஸ்ரீபசுபதீஸ்வரரின் பூரண அனுகிரகத்தைப் பெற்ற ஓமாமாம் சித்தர் போன்ற உத்தமர்களே அபிஜித் முகூர்த்த நேரத்தை, அபிஜித் கோண சக்திகள் பூரிக்கும் நேரத்தை துல்லியமாகக் கணக்கிட்டுக் கூற முடியும். ஒவ்வொரு நாளும் அபிஜித் முகூர்த்த நேரத்தில் சூரிய பகவான் தின்னகோணத்தில் சுயம்பு வடியாய் எழுந்தருளி இருக்கும் ஈசனை தன் கிரணங்களால் தரிசனம் செய்து வழிபடும்போது தோன்றுவதே அபிஜித் முகூர்த்த சக்திகளாகும். எனவே எவர் ஒருவர் தின்னகோண இறைவனின் சுயம்பு மூல சக்திகளை ஊனக் கண்களால் தரிசனம் செய்யும் சக்தி பெற்றிருக்கிறாரோ அவரே அபிஜித் முகூர்த்தத்தை துல்லியமாகக் கணக்கிட்டுக் கூற முடியும். இந்த அபிஜித் முகூர்த்தம் என்பது கால பரிமாணத்தைக் கடந்த கோண சக்தியாக அமைவதால் நள்ளிரவிலும் அபிஜித் முகூர்த்தம் அமையலாம் என்பது விந்தையிலும் விந்தையான செய்தியாகும்.

கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் ஒன்றில் ஊர்ப் பெயர் ‘தின்னக்கோணம்’ என்றும், மற்றொன்றில் ‘தின்னக்குணம்’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. பசுபதீஸ்வரர், கோவிந்தவல்லி அம்மன் சன்னதிகள் தவிர விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, அம்மன், பைரவர், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன.