திருப்பாவை – பாடல் 25  விளக்கம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

அந்தவகையில், மார்கழி மாதத்தின் 25 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 25

திருப்பாவை பாடல் 25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

பறை கேட்டு வந்த பெண்கள், தங்கள் வேண்டுகோளைக் கண்ணனிடம் வெளியிடும் பாடல் இது. கண்ணா! ஒப்பற்ற தேவகிக்கு மகனாகப் பிறந்த நீ, அன்று இரவிலேயே ஒப்பற்ற யசோதைக்கு மகனாகப் போனாய். உன் பிறப்புதான், கம்சனுக்குத் தெரியக் கூடாதென்று மறைக்கப்பட்டதென்றால், உன் வளர்ப்பும் அப்படியே அமைந்தது. அதனால் நீ, ஒளித்து வளர்க்கப் பட்டாய். அதைப் பொறுக்காத கம்சன், (நீ, அவனுக்கு எந்த விதமான தீங்கும் செய்யாமல் இருந்தும்) தானே, “இக்குழந்தையைக் கொல்ல வேண்டும்” என்று நினைத்துச் செய்த தீங்குகளை எல்லாம், நிறைவேறாத படிச் செய்தாய் நீ. தீயவனான அந்தக் கம்சனின் வயிற்றில், நெருப்பாக இருந்த பெருமாளே!

உன்னிடம் யாசகம் கேட்டு வந்திருக்கிறோம் நாங்கள். எங்கள் வேண்டுகோளை நீ நிறைவேற்றினால், லக்ஷ்மி தேவிக்கு ஈடான உன் செல்வத்தையும், உன் வீரத்தையும் நாங்கள் பாடுவோம். உன் பிரிவினால் உண்டான வருத்தமும், குளிரில் வந்த வருத்தமும் நீங்கி, நாங்கள் மகிழ்ச்சியடைந்து வாழுவோம்.