சென்னை

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக ஆம்னி பேருந்துகளை பகலிலும் இயக்க தயார் என உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர் 

நேற்று முதல் தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்;  இந்த வேலை நிறுத்தத்தில் தொ மு ச, ஐ என் டி யு சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை.  எனவே போக்குவரத்துக் கழகம் கணிசமான அளவில் பேருந்துகளை இயக்கி வருகிறது.  இந்த வேலை நிறுத்தத்தினால் பலரும் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்

இந்நிலையில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன்,

”தினசரி தமிழகத்துக்கு 2 ஆயிரத்து 800 ஆம்னி பேருந்துகள் 3 ஆயிரத்து 600 சேவைகள் அளித்து வருகின்றன.  இவற்றில் 80 சதவீத ஆம்னி பேருந்துகள் இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் வார இறுதி நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் தேவைக்கு ஏற்றார் போல் அதிகமான சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஒரு சில தொழிற்சங்கங்கள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

எனவே பயணிகள் பாதிக்கக் கூடாது என்ற நல் எண்ணத்தில் அரசு கோரிக்கை வைத்தால் பயணிகளின் நலன் கருதி இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்படும் எங்களது ஆம்னி பேருந்துகளைப் பகல் நேரங்களில் குறைந்தபட்சம் 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களுக்குப் பயணிகளை ஏற்றிச் செல்ல தயாராக இருக்கிறோம்.

இதற்கு முன்பு 15 நாட்கள் வரை நடந்த வேலைநிறுத்தத்தின் போது ஆம்னி பேருந்துகள் பயணிகளுக்கு அரசு உத்தரவை ஏற்று சிறப்பான சேவையை அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது”

என்று தெரிவித்து உள்ளார்.