தில்லைக் காளி திருக்கோயில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.

சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு போரில், பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை அழிக்க வேண்டும். அந்த அரக்கனை பார்வதியால் மட்டுமே அழிக்க முடியும் என்பது தேவ விதியாக இருந்தது.

ஆகவே பார்வதி சிவபெருமானை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் பார்வதி, உக்ர குணத்தைக் கொண்டு அந்த அவதாரத்தை எடுக்க முடியாது. மேலும் பார்வதி முன்னர் ஒரு சமயத்தில் பெற்று இருந்த சாபத்தினால், சிவபெருமானைப் பிரிந்து சில காலம் வாழ வேண்டும். இவை அனைத்தையும் அந்த ஈசன் அறிந்து இருந்தார். ஆகவே அதற்காக அவர் ஒரு திருவிளையாடலை நடத்தத் துவங்கினார்.

சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி, அழுது புலம்பி, தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டார். பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க, அதற்கு, சிவபெருமான் கூறினார்: “இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களுக்காகப் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். பிறகு, நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து, என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். நான் வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்களது வேண்டுகோளின்படி தில்லையில் ஆனந்த நடனம் ஆடுவேன். அப்போது நீ சிவகாமி என்ற திருநாமத்துடன் என்னிடம் வந்து சேர்வாய்” என்றார். அவ்வாறே அவள் செய்தாள்.

காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வரலானான். தேவர்களும் முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க, அவர் காளி உருவில் இருந்த பார்வதியை, தாரகாசுரனை வதம் செய்ய அனுப்பினார். காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசுரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால், அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறிபிடித்தவள் போல் ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.

தாரகாசுரன் அழிந்தாலும், அசுரர்கள் முனிவர்களைத் தொல்லைப்படுத்தினர். அவர்கள் மீண்டும் சிவபெருமானிடம் மீண்டும் சென்று வேண்டினார்கள். அனைவரும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைவது காளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கு சிவபெருமான் மீது கோபம் ஏற்பட்டது. அவரை விட தானே பெரியவள் என முன்னர் கொண்டு இருந்த எண்ணம் இன்னமும் குறையவில்லை. வெறியும் அடங்கவில்லை. அவளுடைய உக்ரத்தினால் அனைத்து முனிவர்களும் சொல்லொண்ணத் துயருக்கு ஆளாகினார்கள்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த வியாக்கிரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று, சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார். அதை மெச்சி அனைவரும் அமர்ந்திருந்த வேளையில், காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும் அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுள்களும் இசை இசைக்க, காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர், தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்துக் காலை மேலே தூக்கி குண்டலத்தைத் தன் காதில் அணிந்து கொண்டார். அதே ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது. பெண்ணினால் எப்படிக் காலை மேலே தூக்கிக் காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள்.

போட்டியில் தோற்று போனதும், அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரத்துடன் வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இருவரும் இணைந்து இல்லாதவரை பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட, அனைத்து தேவர்களும், திருமாலும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து காளியிடம் சென்று அவளைச் சாந்தமடையுமாறு வேண்டிக் கொண்டனர். அவளது கோபத்தைப் போக்கும் வகையில், பிரம்மா அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி,”பிரம்ம சாமுண்டீசுவரி” என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். அவர் பூசையை ஏற்றுக் கொண்ட காளி, சாந்தநாயகி ஆகி, அதே இடத்தில் இன்னொரு சன்னதியில் சென்று அமர்ந்தாள்.

கோப சக்தியாக இருக்கும் “தில்லைக்காளி“யை “எல்லைக்காளி” என்றும் சொல்வர். பிரம்ம சாமுண்டீசுவரிக்கு “தில்லையம்மன்” என்ற பெயரும் உண்டு. இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். இவளுக்கு தினமும் அபிசேகம் நடைபெறும்.

தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள். இப்படி செய்வதால் அம்மன் மகிழ்ந்து வேண்டும் வரம் தந்திடுவாள் என்பது நம்பிக்கை.