காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட எதார்த்தமான கதைகளங்களை கொண்ட படங்களை இயக்கியவர் மணிகண்டன்.

சமீபத்தில் மணிகண்டனின் மதுரை வீட்டில் நுழைந்த திருட்டுக் கும்பல் அவரது வீட்டில் இருந்த நகை, பணத்துடன், அவர் வாங்கிய தேசிய விருதுகளையும் திருடி சென்றது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடைசி விவசாயி திரைப்படத்திற்கு சிறந்த படத்துக்கான தேசிய விருதும் தவிர இதில் நடித்த நல்லாண்டி என்பவருக்கும் தேசிய விருது கிடைத்தது.

இந்த நிலையில் மதுரையில் உள்ள மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்க நகையுடன், கடைசி விவசாயி படத்துக்காக வாங்கிய 2 தேசிய விருது பதக்கங்களையும் மர்ம நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தேசிய விருதுகளை மர்ம நபர்கள் அவரது வீட்டின் முன்பு பாலிதின் பையில் வைத்து அதனுடன் ஒரு கடிதத்தையும் விட்டுச்சென்றுள்ளனர். அதில் “அய்யா எங்களை மன்னித்துவிடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதி வைத்துள்ளனர்.

கடந்த வாரம் கொள்ளை நடந்த அதே வீட்டின் முன் இந்தவாரம் மீண்டும் வந்து யாருக்கும் தெரியாமல் திருடிய பொருட்களை விட்டுச் சென்றிருப்பது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு காவல்துறையினரை திணற வைத்துள்ளது.