சென்னை: அரியர் தேர்வை ரத்து செய்ததில் எந்த விதிமுறை மீறலும் இல்லை, அனைத்து பல்கலைக்கழகங்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு மீண்டும் உறுதிப்பட தெரிவித்து உள்ளது.

 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர மற்ற அரியர் தேர்வுகளை ரத்து செய்து, தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  அரியர் தேர்வை ரத்து  செய்ய முடியாது என்று யுஜிசி ( பல்கலைக் கழக மானியக் குழு) மீண்டும் உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்து உள்ளது. தமிழகஅரசின் உத்தரவுக்கு எதிராக யுஜிசி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருவது தமிழக மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் சென்னை பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள், இறுதியாண்டு அரியர் தவிர மற்ற அனைத்து அரியர் தேர்வுகளும் தேர்ச்சி பெற்ற அறிவித்து, அதற்கான சான்றிதழ்களையும் வழங்கிவிட்டன.

ஆனால், பொறியியல் அரியர் தேர்வு விவகாரம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  யுஜிசியின் முட்டுக்கட்டை  மற்றும் வழக்கினால் இழுத்தடிக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காணொளி காட்சிமூலம் நடைபெற்ற விசாரணையின்போது, மாணவர்கள் ஏராளமானோர் இணைந்து கூச்சலிட்டதால், வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  “அரியர் தேர்வை ரத்து செய்ததில் எந்த விதிமுறை மீறலும் இல்லை” “அனைத்து பல்கலை உடன் ஆலோசித்து தான் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது” “மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது” “இது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது இல்லை” .

பல்கலைக்கழகளுக்கு அதிகாரம் உள்ளதால் தான் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும்,  இது எந்த வகையிலும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காது, அரசின் இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவது ஆகாது என்றும் பதில் மனுவில் உறுதிப்பட தெரிவித்து உள்ளது.