சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் உள்ள அரசு அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லை இதனால் பணிகள் தாமதமாகிறது என தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேதனை தெரிவித்தார். அமைச்சரின் ஓபன் டாக் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை  ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல் இதுவரை ஏராளமான மக்கள் நல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் பல அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படாத நிலையிலும், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் தலையீடு காரண மாக முடங்கிப்போய் உள்ளது. அதுபோல மழைநீர் வடிகால் பணிகளிலும் அரசு அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக, பல இடங்களில் பணிகள் முடிவடையாமல், வர இருக்கும் பருவமழையின்போது பொதுமக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சென்னை ஆலந்தூரில், சமீப நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அந்த பகுதி எம்எல்ஏவும்,  ஊரக தொழில்துறை அமைச்சருமான  தாமோ அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகளை கடிந்துகொண்ட அமைச்சர்,  ஒரு பணியினை செய்வதற்கு இரண்டு மூன்று அதிகாரிகள் இணைந்து செய்தால்,  அந்த பணிகள் விரைவில் முடிவடையும். ஆனால், அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் அரசின் பணிகள், திட்டங்கள்  தாமதமாகிறது என சாடினார். அதிகாரிகள் ஒற்றுமையின்மை காரணமாக,  வேலை தாமதமாகி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இது அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்துகிறது. அதனால், அதிகாரிகள் இணைந்து விரைவாக சீரமைப்பு பணிகளை  மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.