டில்லி:

நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தென்னிந்திய விவசாய கள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு  விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி அரசுக்கு எதிராக டில்லியில் கடுமையான போராட்டங்களை நடத்தி வந்தார். ஆனால், அவரது போராட்டத்தை மோடி அரசு கண்டுகொள்ளாத நிலையில்,  மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் தான் உள்பட  111 விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று அறிவித்தார்.

இதற்கிடையில், அய்யாக்கண்ணுவை,  தமிழக அமைச்சர் தங்கமணி டில்லி அழைத்துச் சென்று அமித்ஷாவை சந்திக்க வைத்தார். சந்திப்பை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அய்யாக் கண்ணு,  அமித்ஷாவுடனான சந்திப்பு மன நிறைவை தருவதாக தெரிவித்தவர், வாரணாசியில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.

அய்யாக்கண்ணுவின் திடீர் பல்டி விவசாயிகள்  மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையும் வெளியானது. அதில் விவசாயி களுக்கு வட்டியில்லா கடன் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன..

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு,  தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிப்பதாக இல்லை என்று தெரிவித்தவர்,   பாஜகவின் தேர்தல் அறிக்கை விவசாயி களுக்கு நன்மை தரக்கூடியது என்று பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

மேலும், விவசாயக்கடனை தள்ளுபடி செய்வதாக காங். அறிவித்ததும் மனநிறைவை தருகிறது என்று கூறிவர்,   நான் பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டதாக பரவிய செய்தியை மறுக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைத்ததாலேயே அவருடன் அமித்ஷாவை சந்தித்ததாக தெரிவித்த அய்யாக்கண்ணு,  எங்களிடம், கடன் தள்ளுபடி தவிர எஞ்சிய 5 கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்ததை தொடர்ந்தே, எங்கள் சங்க நிர்வாகிகள் 9 பேரை பாஜகவினர் டெல்லியில் அமித்ஷா இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமித்ஷாவும் எங்களிடம் அதே வாக்குறுதியை அளித்தார் என்று கூறியவர்,  இதுகுறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் வெளி யிடப்படும்வரை, வெளியே கூற வேண்டாம்என்று கேட்டுக் கொண்டார். கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் மிகுந்த மன நிறைவுடன்  இருந்தோம் என்றார்.

இதன் காரணமாக நாங்கள்  , பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகவோ அல்லது வாக்களிப்பதாகவோ எந்த வாக்குறுதியையும் நாங்கள் அளிக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கை யில் பாஜக வெளியிட்டுள்ளது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. எனவே, வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட மாட்டோம் என்ற உறுதியைத்தான் அளித்துள்ளோம் என்று கூறியவர்,  ஒருவேளை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று எங்களுக்கு அளித்தவாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையெனில், எந்த எல்லைக்கும் சென்று நாங்கள் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.