அரசியலில் அதிர்ச்சி என்பதே கிடையாது… அனுபவம்தான்! பஞ்ச் கொடுக்கும் டி.டி.வி. தினகரன்

Must read

சென்னை,

திமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கி உள்ளது.

இதுகுறித்து சசி அதிமுகவை சேர்ந்தவரும், அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

 

“தேர்தல் ஆணையம் தற்காலிகமாகத்தான் இரட்டை இலை சின்னத்தை முடக்கியுள்ளது. எனவே நாங்கள் உயர்நீதி மன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ மேல்முறை யீடு செய்து இரட்டை இலை சின்னத்தை நிச்சயமாக  மீட்டெடுப்போம்.

ஏனெனில் அரசியலைப் பொறுத்த மட்டில், எந்தவொரு நிகழ்வையும் அதிர்ச்சியாக எடுத்துக் கொள்ளக்கூடாது, அனுபவமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் சரித்திரம் திரும்பி இருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பின், இதே போல இரட்டை இலை சின்னம் முடக்கம் செய்யப்பட்டது. அப்போதும் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க, அம்மாவுடன் சேர்ந்து நாங்கள் போராடினோம். அதன் விளைவாகவே இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்தது.

அதுபோல இந்த முறையும், ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றிபெற்று இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே உரியதாக்குவோம்.

ஒன்றரை கோடி உண்மையான தொண்டர்கள் எங்களோடு இருக்கிறார்கள்.  இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் எங்களுக்கு எந்த பிரச்னையையும் இல்லை.

நாங்கள் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், ஆர்.கே நகர் தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்.  அதுமட்டுமல்லாமல் நான் அம்மாவின் மாணவன். அவரிடம்தான் அரசியல் பயின்றேன். ஆகவே, இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்டெடுப்போம்”.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article