சென்னை:
தற்போதைய நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும், ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் பேசி 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள் இறுதி தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதுபோல கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கொரோனா சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்.
மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தெரிவிக்கப் படும்.ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் பேசி 2 நாட்களில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.