சென்னை:

காவல்துறையில் நல்ல போலீசார் ஏராளமானோர் இருப்பதாக கூறும் நிலையில், நல்ல போலீசார் ஏன் கொலையாளி போலீஸை கைது செய்ய முயலவில்லை? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம், தமிழகம் மட்டுமின்றி, இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உயிரிழக்க வைத்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று  அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆனால், அவர்கள் மீது வழக்குபதிவு செய்யாமல், எப்போதும்போல சஸ்பெண்ட் செய்து, தமிழக அரசு பாவ்லா காட்டி வருகிறது.

இந்த நிலையில், தந்தை மகன் இறப்புக்கு ராகுல்காந்தி உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்,  சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  மேலும், டிவிட்டரில்  சமூக வலைதளத்தில் #JusticeForJeyarajAndFenix எனும் ஹேஸ்டேக், வைர லானது.  இந்திய அளவில் முதல் இடத்தில் டிரென்டிங்கனான இந்த ஹேஸ்டேக் உலக அளவில்  6-ம் இடத்தைப் பெற்றது.

இந்த நிலையில், ஒரு தரப்பினர் காவல்துறையினருக்கு ஆதரவாகவும், அங்கும் பல நல்ல போலீசார் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, டிவிட் பதிவிட்டுள்ள  அறப்போர் இயக்கத்தைச்சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன்,  காவல்துறையில் நல்ல போலீசார் மற்றும் மோசமான போலீசார் இருக்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்

ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்காவிட்டால் நல்ல போலீஸ்காரர்களின் பயன் என்ன?

நல்ல போலீசார் ஏன் கொலையாளி போலீஸை கைது செய்ய முயலவில்லை? அவர்கள் எதற்காக அஞ்சுகிறார்கள்?

அவர்கள் இப்போது பேசவில்லை என்றால் என்ன பயன்? என்று அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார்.