சென்னை:

மிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என்ற  உச்சநீதி மன்றம், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டு உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தக் கோரி தி.மு.க. , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  எஸ்.சி எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடை முறையாக பின்பற்றாமல் தமிழகஅரசு உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது என்று கூறி, தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி திமுக உள்பட தமிழக எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன. காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகளின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமைநீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

முன்னதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தமிழக மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், இட ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் சரியாக கடைபிடிக்க படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று, பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடும், பட்டியல் இனத்தவருக்கு, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திமுக உள்ளிட்ட மற்ற தரப்பு மனுக்களை விசாரிக்க தேவையில்லை எனவும், அந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கில், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக்மனு சிங்வி ஆஜரானார். அப்போது, புதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சித் தேர்தலில் கடை பிடிக்கப்படவில்லை என்றும், சுழற்சி முறையில் வழங்கவேண்டிய பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

வழக்கின் விசாரணை காரசாரமாக நடைபெற்றபோது, வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, திரு வள்ளூர் மாவட்டத்துக்கு திருவல்லார் என்று கூற, அதை தலைமைநீதிபதி பாப்டே, திருவள்ளூர் என்று திருத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற வாதங்களையடுத்து, 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும், மாநில தேர்தல் கமிஷனின் தேர்தல் தேதி அறிவிப்புக்கு  தடை விதிக்க மறுப்பும் தெரிவித்து உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.