பேச்சினால் வளர்ந்த கட்சி என்ற பெயர் தி.மு.க.வுக்கு உண்டு.  ஆழமான கருத்துக்களை, ஆதரங்களோடு பேசுபவர்கள் ஒருபக்கம் என்றால், “கவர்ச்சி”யாகவும்  நகைச்சுவையாகவும் பேசி தொண்டர்களை ஈர்க்கும் பேச்சாளர்களும் உண்டு.   இந்த வரிசையில் முக்கியமானவர்தீ, “ப்பொறி” ஆறுமுகம்.  

கூட்டத்தில் பேசும் "தீப்பொறி"
கூட்டத்தில் பேசும் “தீப்பொறி”

தான் சார்ந்த கட்சிக்காக, எதிர்க்கட்சித் தலைவர்கள், தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி, பல வழக்குகளை எதிர்கொண்டவர்.  தமிழகம் முழுதும் இவர்  குரல் கேட்காத ஊர் இல்லை.
அண்ணா காலத்தில் இருந்து தி.மு.க.வே உயிர்மூச்சு என்று வாழ்ந்தவர், ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
தனது மருத்துவ சிகிச்சைக்காக திமுக தலைவர் கருணாநிதியிடம், இவர் பண உதவி கேட்டதாகவும்…. உதவி கிடைக்காததால் விரக்தியில் விலகியதாகவும் செய்திகள் வெளியானது.
அதிமுகவில் இணைந்த தீப்பொறி ஆறுமுகத்துக்கு, அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா சுமோ கார் வழங்கினார்:  காருக்கு பராமரிப்பு செலவாக மாதம் ஒரு தொகையும் அளித்தார்.  தவிர, தீப்பொறி  தனியார் மருத்துவமனியில் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார்.
“திமுகவில் இருந்த அத்தனை காலமும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் , ஆனால் என்னை காரில் உட்கார வைத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. என் வாழ் நாளில் அவரை மறக்க முடியாது” என்று தீப்பொறி ஆறுமுகம் பேட்டி அளித்தார்.
மு.க. அழகிரி முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் "தீப்பொறி"
மு.க. அழகிரி முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் “தீப்பொறி”

ஆனால், 2010ம் ஆண்டு மீண்டும் மு.க. அழகிரி முன்பாக, தி.மு.க.வில் இணைந்தார். “ஒன்பது ஆண்டுகள் அ.தி.மு.க. எனும் சிறையில் இருந்தேன். இப்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன்” என்றார்.
அன்று முதல் தி.மு.க. மேடைகளில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது தீப்பொறி ஆறுமுகத்தின் குரல். ஆனால் முன்புபோல் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை, ஸ்டாலின் ஆதரவாளர்கள் தீப்பொறியை அரவணைப்பதில்லை என்று செய்தி பரவியது.
இந்த நிலையில் கடந்த உடல் நலம் பாதிக்கவே, மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ரத்னா தனியார் மருத்துவமனையில் தீப்பொறி சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி தீயாக பரவிவருகிறது.
அதில், “தி.மு.க.வுக்காக காலம்காலமாக உழைத்த தீப்பொறி ஆறுமுகம், தள்ளாத வயதில் உடல் நலிவுற்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ செலவுக்கு பணமின்றி அல்லாடும் அவருக்கு தி.மு.க.வில் யாரும் உதவவில்லை.
மருத்துவமனையில் தீப்பொறி ஆறுமுகம்
மருத்துவமனையில் தீப்பொறி ஆறுமுகம்

இதுவரை யாரிடமும் கையேந்தி பழக்கப்படாதவர் இன்று உடல் நிலை கருதி உங்களிடம் உதவி கேட்கிறார்.  நல்ல மனமுள்ள கழகத்தோழர்கள் உதவுங்கள் இந்த தகவலை தலைவர் கலைஞர் , தளபதி அவர்களிடம் தகவலை சொல்லுங்கள் தொடர்புக்கு தீப்பொறி ஆறுமுகம்.  அவரது செல் நம்பர் 9597771322. அவருக்கு ஆறுதல் சொல்வதோடு, உதவியும் செய்யுங்கள்”  என்பதுதான் அந்த வாட்ஸ் அப் செய்தி.
இதையடுத்து நாம் தீப்பொறி ஆறுமுகத்தை அவரது அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோம். அவரது மனைவி சங்கரவடிவு பேசினார்.
அவர், “இப்போதுதான் கொஞ்சம் தூங்குகிறார்.  கல்லீரல் சரிவர செயல்படவில்லை. ஆகவே வயிற்றில் தண்ணீர் தேங்கி, அது முழங்கால் வரை பரவிவிட்டது  என்று  மருத்துவர்கள் சொல்கிறார்கள்.  மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் நித்ரா மருத்துவமனையில் நான்காவது மாடியில் 403ம் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்”   என்றார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்புகொண்டபோது, தீப்பொறி ஆறுமுகம் நம்மிடம் பேசினார்.
மேடைகளில் ஓங்கி ஒலிக்கும் அவரது எள்ளல் குரல், மிக சன்னமாக எளிதில் புரிந்துகொள்ள முடியாதவாறு இருந்தது.  முதுமையும், உடலின் வலியும்  பிசிறடித்த அவரது குரலில் தெரிந்தது.
"கலைஞர் உதவுவார்"
“கலைஞர் உதவுவார்”

அவரிடம், “வாட்ஸ்அப்”பில் பரவி வரும் செய்தி குறித்து கேட்டோம்.
சற்று நேர மவுனத்துக்குப் பிறகு, “என்னோட நிலைமை இப்போ மோசம்தான். ஆனா, இந்தத் தகவலை தலைவர் கலைஞரிடம் தெரிவித்துவிட்டார்கள். மதுரை வட்டார தி.மு.க. நிர்வாகிகள் சிலர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள்.   தலைவர் கலைஞரும்,  சிகிச்சை முடிந்து சென்னைக்கு வரச்சொல்லி தகவல் கொடுத்திருக்கிறார்.  நிச்சயம் தலைவர் கலைஞர் உதவுவார்” என்றார், ஈனஸ்வரத்தில்.
அதுதான் நமது விருப்பமும்.