சென்னை: தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்குப் பிறகு இன்றுமுதல் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50 சதவிகித பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டித்த தமிழகஅரசு, மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது.
கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்த மே மாதம் தியேட்டர்கள் உள்பட பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டன. மேலும் லாக்டவுனும் கடுமையாக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா படிப்படியாக குறைய தொடங்கியதால், தமிழகஅரசும் அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால், தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் தியேட்டர் உரிமையாளர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து தற்போது மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், தியேட்டர்கள் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க உள்ளன. தியேட்டர் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் தியேட்டர்களில் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.