சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளி பாடத்திட்டத்திலும் ‘மத்தியஅரசு’ என்ற வார்த்தை ‘ஒன்றிய அரசு’ என மாற்றப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகம்  தலைவராக பொறுப்பேற்றுள்ள திமுக பேச்சாளரும், பண்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி கூறினார்.

தமிழ்நாடு பாடநூல் கழகம் தலைவராக திண்டுக்கல் லியோனியை தமிழ்நாடு அரசு நியமித்து உள்ளது. திண்டுக்கல் லியோனி தீவிரமான திமுக பேச்சாளர் என்பதால், அவரது நியமனம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனமேன   ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப் புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் பல்நுட்பக் கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரித்து வழங்கு கிறது. இந்த  நிறுவனத்தின் புதிய தலைவராக பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளது விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

திண்டுக்கல் லியோனியின் நியமனம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டில், பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழகம்  தலைவராக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் லியோனி, பள்ளி பாடத்திட்டத்திலும் ‘மத்தியஅரசு’ என்ற வார்த்தை ‘ஒன்றிய அரசு’ என மாற்றப்படும் என தெரிவித்து உள்ளார்.