சென்னை,

டந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணையை  ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்னை மெரினா அருகே நடுக்குப்பம் பகுதியில் வாகனத்திற்கு பெண் போலீசார் ஒருவரே  தீ வைக்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதுகுறித்து விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ள போலீசார், தேன்கூட்டிற்குத்தான் தீ வைத்ததாக கூறி உள்ளதாக ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் கூறி உள்ளார்.

ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். இறுதி நாளில் போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது, சமூக விரோதிகள் ஊடுருவியதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து மாநகரம் முழுவதும் வன்முறையால் பாதிக்கப்பட்டது.

இந்த வன்முறை குறித்து விசாரிக்க நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷனை அரசு அமைத்தது. அதைத்தொடர்ந்து நீதிபதி ராஜேஸ்வரன் சென்னை, திருச்சி, கோவை உள்பட பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினார்.

மேலும், போலீசாரின் வன்முறையில்  கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த வாகனம்  ஒன்றுக்கு பெண் போலீசார் ஒருவர் தீ வைத்தது குறித்தும் விசாரணை நடத்தினார். மேலும் மீன்சந்தை பகுதிகளில் மீனவர்களிடமும், அங்குள்ள வணிகர்களிடமும் வன்முறை குறித்து நீதிபதி ராஜேஸ்வரன் கேட்டறிந்தார்.

இந்நிலையில், விசாரணை குறித்து நீதிபதி ராஜேஸ்வரன் கூறியிருப்பதாவது,

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, பொதுச்சொத்துக்களுக்கு தீ வைக்கவில்லை என்றும், தேன்கூட்டை கலைக்கவே தீ வைத்ததாக விசாரணை ஆணையத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலவரத்தின்போது ஆட்டோவுக்கு பெண் போலீஸ் ஒருவர் தீ வைக்கும் காட்டி தெளிவாக தெரியும் நிலையில் தேன்கூட்டுக்கு தீ வைத்ததாக போலீசார் கூறியிருப்பது, பொதுமக்கள் போலீசார் மீது கொண்டுள்ள அதிருப்தி மேலும் வலுவடைந்துள்ளது.