ஒவ்வொரு இந்தியனின் உள்ளிருந்தும் ஒலித்த பாரத மாதாவின் குரல் என் ஆணவத்தை அழித்தது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“கன்னியாகுமரி கடல் முனையில் ஆரம்பித்து காடு, மலை, நகரம் என்று வெயில், மழை, பனி, என அனைத்து பருவநிலையிலும் 145 நாட்கள் தொடர்ந்த பயணம் பனிபொழியும் காஷ்மீரில் நிறைவடைந்தது.

தினமும் 8 முதல் 10 கிலோ மீட்டர் ஓடும் எனக்கு தினமும் 20 முதல் 25 கிலோ மீட்டர் நடப்பது பெரிய காரியமில்லை என்று எண்ணித் தான் இந்த பயணத்தை தொடங்கினேன்.

பயணம் ஆரம்பித்த முதல் சில நாட்களிலேயே எனது முழங்கால் வலி என்னை நடக்கமுடியாமல் செய்தது. 3800 கி.மீ.ரை கடக்க முடியுமா என்ற கேள்வி என் முன்னே மலை போல் எழுந்தது.

என்னுள் எழுந்த அந்த ஒற்றைக் கேள்வியிலேயே என் ஆணவம் அழிந்தது.

ஒவ்வொரு முறை நான் இந்த பயணத்தைக் கைவிட நினைத்த போதும் யாராவது ஒருவர் வந்து எனது பயணத்தை தொடர தேவையான உத்வேகத்தை அளித்தனர்.

அது ஒரு சிறுமியாகவோ, வயதான பெண்மணியோ அல்லது ஒரு ஏழை விவசாயியோ ஏதோ ஒருவகையில் எனது பயணத்துக்கு உத்வேகம் அளித்தனர்.

ஒவ்வொரு நாளும் எனது யாத்திரை தொடர்ந்த போது நாளுக்கு நாள் மக்கள் ஆர்வத்துடன் வந்து என்னை உற்ச்சாகப்படுத்தினர்.

மக்களின் ஆரவாரத்துடன் தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்ட எனக்கு வழியெங்கும் நான் பார்த்த மனிதர்கள் படும் இன்னல்களும் வேதனைகளும் எனக்குள் ஒரு அமைதியை ஏற்படுத்தியது.

ஒரு ஏழை விவசாயி தனது அழுகிய பஞ்சு செடிகளை காண்பித்து தன் பிள்ளைகளை எப்படி காப்பாற்றப்போகிறேன் என்று அழுதார். தனது தந்தையின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் அவர் இறந்தது குறித்து கூறினார். வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க முடியாமல் அவரது மனைவியிடம் அடைந்த அவமானத்தைப் பற்றிக் கூறினார். அவரது குழிந்த முகத்தில் அவர் பசியுடன் கழித்த இரவுகளை என்னால் காண முடிந்தது. அவரது கைகளை பார்க்கையில் பல ஆண்டு உழைப்பு தெரிந்தது.

ஒருநாள் அல்ல ஒவ்வொரு நாளும் இதேபோன்று பலரை நான் சந்தித்தேன். குழந்தைகளுடன், தாய்மார்களுடன், மாணவர்களுடன் அந்த சந்திப்பு நடந்தது. கடைக்காரர்கள், தச்சர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுடன் இது நடந்தது. ராணுவ வீரர்களுடன் நடந்தது.

ஒவ்வொரு இந்தியனின் உள்ளிருந்தும் பாரத மாதாவின் குரல் ஒலித்தது.

நான் விரும்பியது, இந்த நிலமா? மலைகள்? கடல்? அது ஒரு நபரா? மக்களா ? அல்லது யோசனைகளின் தொகுப்பா? என்ன என்பதைத் துல்லியமாக அறிய விரும்பினேன்.

என் அன்புக்குரிய பாரத மாதா ஒரு நிலம் அல்ல. இது யோசனைகளின் தொகுப்பாக இருக்கவில்லை. அது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம், வரலாறு அல்லது மதம் அல்ல. மக்கள் ஒதுக்கப்பட்ட சாதியும் இல்லை.

பலவீனமாக இருந்தாலும் சரி, பலமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு இந்தியனின் குரலாக இந்தியா இருந்தது. எல்லாக் குரல்களுக்குள்ளும் ஆழமாக மறைந்திருந்த மகிழ்ச்சியும், பயமும், வேதனையும் இந்தியாவாக இருந்தது.

இந்தியாவின் குரலைக் கேட்க, என் சொந்தக் குரல் – என் ஆசைகள் – என் லட்சியங்கள் மௌனமாக வேண்டும். இந்தியா தன் சொந்தத்தில் ஒருவரிடம் பேசும், ஆனால் ஒருவர் பணிவாகவும் முற்றிலும் அமைதியாகவும் இருந்தால் மட்டுமே பேசும்.

பாரத மாதாவின் குரல் எளிமையானதாக மாறியது. கடலில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒன்றை ஆற்றில் தேடிக்கொண்டிருந்தேன்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.