தேர்தல் : 2016:   தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் கொடிநாட்டப்போவது யார்?

Must read


download

தஞ்சை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பாக போட்டியிடுபவர் அஞ்சுகம் பூபதி.  அ.தி.மு.க. சார்பாக போட்டியிடுபவர், சிட்டிங் எம்.எல்.ஏவான ரங்கசாமி.
மக்கள் நலக்கூட்டணி சார்பாக தேமுதிகவைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் களமிறக்கப்பட்டுள்ளார். பாமக சார்பாக குஞ்சிதபாதம் என்பவரும் , நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வழக்குரைஞர். நல்லதுரை என்பரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
போட்டி என்னவோ தி.மு.க.வுக்கும் அ.தி.மு.கவுக்கும் தான்.

ரங்கசாமி (அ.தி.மு.க.)
ரங்கசாமி (அ.தி.மு.க.)

அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ  ரெங்கசாமி கடந்த 2006ல் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். பிறகு  20011 ல் இதே தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்றவர்.  நீண்ட கால அரசியல் அனுபவம் இருந்தாலும், தொகுதிக்கு இவர் புதுமுகம் போலவே அறியப்படுகிறார்.
காரணம், தேர்தல் காலம் தவிர மற்ற நேரங்களில் இவரை பார்க்கவே முடிவதில்லை என்கிறார்கள் மக்கள். மக்கள் குறைகளை கண்டுகொள்வதில்லை என்பதோடு, இன்னொரு புகாரும் இவருக்கு எதிராக இருக்கிறது.
சசிகலா கணவர் நடராஜனுக்கு சொந்தமான தமிழரசி கல்யாண மண்டபம் தஞ்சையில் இருக்கிறது. இதற்கு அருகில் உள்ள இடத்தை நடராஜன் தரப்பு ஆக்கிரமித்ததாகவும், அதற்கு எம்.எல்.ஏ. ரங்கசாமி உடந்தையாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.  ரங்கசாமியை எதிர்த்து போராட்டமும் நடத்தினர். இது இவருக்கு பெரும் மைனஸ்.
அஞ்சுகம் பூபதி (தி.மு.க.)
அஞ்சுகம் பூபதி (தி.மு.க.)

 
அதோடு, உட்கட்சி பூசலும் நிலவுகிறது.
தஞ்சை மாநகராட்சியின் மேயரான சாவித்திரி கோபால், அமைச்சர் வைத்தியலிங்கத்தின் குட்புக்கில் இருப்பவர். ஆகவே மாநகராட்சி தேவைகளை, அமைச்சரை வைத்து நிறைவேற்றுவார். அதற்கான நிகழ்ச்சிகளில் அமைச்சரும், மேயரும் இருப்பார்கள். எம்.எல்.ஏ. தென்பட மாட்டார்.  ஆகவே பெரும் வாக்காளர் கொண்ட தஞ்சை மாநகராட்சிக்கு ரங்கசாமி புதுமுகம்தான்.
மேலும் இம்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சாவித்திரி கோபால் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. ஆகவே அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியாற்றுவதில் இருந்து விலகி நிற்கிறார்கள்.
இதே போல சமீபத்தில் மறைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமுத்துவின் மகன் தங்க.கண்ணனும் தஞ்சை வேட்பாளராக முயன்றார். வாய்ப்பு கிடைக்காததால் அவரும் சுணங்கிப்போய் இருக்கிறார்.
வி. ஜெயபிரகாஷ் (தே.மு.தி.க.)
வி. ஜெயபிரகாஷ் (தே.மு.தி.க.)

 
கணிசமான தொண்டர் பலம் உள்ள இவர்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதால் ரங்கசாமி திண்டாடிப்போய் நிற்கிறார்.
மேலும், கடந்தமுறை ரெங்கசாமி கூறிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை என்கிற குறையும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
“தஞ்சை பழைய பேருந்து நிலையம் இரு பிரிவாக செயல்படுகின்றது. இவற்றை இணைக்க சுரங்கப்பாதை அமைத்துத் தருவதாக சொன்னார். ஆனால் அதற்காக ஒரு துரும்பையும் இவர் எடுத்துப்போடவில்லை.
தஞ்சை இராசாமிராசுதார் மருத்துவமனையில் விபத்து சிகிச்சைபிரிவு தொடங்கப்படும் என்றார்.
தஞ்சை மக்களின் அடிப்படை பிரச்சனையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க திருமானூர் கொள்ளிடத்திலிருந்து புதிய குடிநீர் திட்டம் கொண்டு வருவேன் என்றார்.
மக்கள் குடியிருப்பு நிறைந்துள்ள ஜெபமாலைபுரம்  பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பைக்கிடங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு,  அடிக்கடி தீப்பிடித்து சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. இதை உரக்கிடங்காக மாற்றுவேன் என்றார்.
இப்படி இவர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைய. ஆனால் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை” என்று குமுறுகிறார்கள் மக்கள்.
நல்லதுரை (நாம் தமிழர் கட்சி)
நல்லதுரை (நாம் தமிழர் கட்சி)

ஆகவே மற்ற தொகுதிகளில் எப்படியோ.. தஞ்சையைப் பொறுத்தவரை அதிமுக எதிர்ப்பலை வீசுகிறது.
தி.மு.க. சார்பில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதி, தேர்தலுக்கு புதிய முகம். . 29 வயதே ஆனவர். மகப்பேறு மருத்துவர்.
தி.மு.க.வின் மருத்துவ பிரிவில் இருக்கிறார் என்றாலும் கட்சிக்காரர்களிடம் பெரிய அளவில் அறிமுகம் இல்லை.
ஆனாலும் அ.தி.மு.க. வேட்பாளர் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி இவரை வெற்றி பெற வைக்கும் என்கிற சூழல்தான் தற்போது நிலவுகிறது.

More articles

Latest article