சென்னை:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

‘பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் ஆலோசனையின்படி கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு நவீன இயந்திர உபகரணங்களைக் கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய்த் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தொற்று நோய் கண்டறியப்பட்ட நபர்கள் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிக் கிளைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

மேலும், ஏடிஎம் மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பின்னர் உடனடியாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிக்கு வரும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகமூடி (Mask) அணிதல், அலுவலகங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் அவ்வப்பொழுது கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவுதல் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும்.

கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளுக்காக தனியாக பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே நியமிக்க வேண்டும். தங்களின் அலுவலகங்கள் குறித்த விவரம், கிருமிநாசினி இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலருக்கு arohqprop@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9445190742 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் மே 1-க்குள் தெரிவிக்க வேண்டும்.

அனைத்து அலுவலகங்களும் அவ்வப்போது சுகாதாரத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்படும். தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய் சட்டம் 1897 பிரிவு 2-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்படும்.

எனவே, அனைத்து அனுமதிக்கப்பட்ட அலுவலகங்களும் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றி கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’ .

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.