கறுப்பு பண விவகாரத்தில் மோடியின் முகத்திரையை கிழித்த ரிசர்வ் வங்கி அறிக்கை

Must read

டில்லி:

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பிரதமர் மோடி சுதந்திர தினத்தில் உரையாற்றினார். அப்போது, ‘‘ஏழை மக்களையும் நாட்டையும் ஏமாற்றி கொள்ளையடித்து பணம் சேர்த்தவர்கள் தற்போது நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

பணமதிப்பிழப்பு அறிவிப்பால் கணக்கில் காட்டப்படாமல் இருந்த 3 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த 18 லட்சம் பேர் அரசின் கண்காணிப்பிற்கு வந்துவிட்டனர். 1.25 லட்சம் கோடி பிடிபட்டுள்ளது. கறுப்புப் பணத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடரும்’’ என்றார்.

பணமதிப்பிழப்பு மூலம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் கறுப்புப் பணம் எவ்வளவு என்ற விவரம் வெளியிடப்படாமல் இருந்தது. இது குறித்து மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஒரு முறையான பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 99 சதவீதம் திரும்பி வந்துவிட்டது. புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். இதில் 15 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப வந்துவிட்டது என ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது.

இது குறித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்த ரிசர்வ் வங்கியின் செயல்பாடு வெட்கக்கேடானது. இதனால் ரிசர்வ் வங்கிக்குக் கிடைத்த லாபம் 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதைப் பரிந்துரை செய்த பொருளாதார நிபுணருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். 99 சதவீத ரூபாய் நோட்டுகள் சட்டரீதியாகவே மாற்றப்பட்டுவிட்டன. கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் உள்ளது’’ என்றார்.

கறுப்புப் பணம் பிடிபடும், கள்ள ரூபாய் நோட்டுக்கள் பிடிபடும், ஹவாலா ஒழியும், லஞ்சம் ஒழியும், என் மோடியின் முழக்கம் வெற்று பேச்சாகிவிட்டது. ஆனால், அருண் ஜெட்லியோ தற்போது கூறுகையில், ‘‘ரொக்கப் பணப் பரிமாற்றத்தை ஒழித்து, டிஜிட்டல் பரிமாற்த்தை கொண்டு வரவே பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டது’’ என தெரிவித்துள்ளார்.

50 நாட்களில் கறுப்பு பண பிரச்னை தீராவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு கோவாவில் மோடி பேசினார். இப்போது 300 நாள்கள் முடியபோகிறது. தற்போது புதிய இந்தியா பிறக்க போகிறது என்று மோடி கூறி வருகிறார்.

5 ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். இதற்கு 125 கோடி மக்களின் பங்களிப்பு வேண்டும். கூட்டு முயற்சியினால் மட்டுமே நம் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று மோடி பல முறை பேசியுள்ளார். நம் நாடு நன்றாக வளர பல தலைவர்கள் ஏற்கெனவே அஸ்திவாரம் போட்டுவிட்டனர். இனி நம் இந்தியாவை சாதி, மதம், மொழி, இனம் என எந்த ஒரு வேற்றுமையின்றி வளர்த்தாலே போதுமானது.

பணமதிப்பிழப்பை எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் அரசியல் செய்கிறார்கள். சாதாரண மக்கள் கேட்டால் தேச விரோதி என முத்திரை குத்தப்படுகிறது. தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கைக்கு மோடி என்ன பதில் சொல்லப்போகிறார் என்பது தெரியவில்லை. பணமதிப்பிழப்பு தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமர் மவுனம் கலைந்து ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

More articles

Latest article