டில்லி:

‘‘பணமதிப்பிழப்பால் என்ன நன்மை நடந்தது’’ என்று அதன் மூலம் பிரபலமான முதியவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இதனால் தங்கள் கைவசம் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை மாற்ற வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு பற்றாகுறை நிலவியதால் மக்கள் பெரும் போராட்டத்தை சந்திக்க நேரிட்டது.

பணம் மாற்றுவதற்காக கடந்த டிசம்பர் 13ம் தேதி புதுடில்லி நியூகாலனியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் லால் என்ற 78 வயது முதியவர் வரிசையில் தனது இடத்தை இழந்ததற்காக கண்ணீருடன் தடுமாறிய புகைப்படம் ஹந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படத்தை ஆயிரகணக்கான மக்கள் சமூக வளை தளங்களில் பகிர்ந்தனர்.

இச்சம்பவம் நடந்து 8 மாதங்களுக்கு பிறகு லால் தற்போது கூறுகையில்,‘‘பணமதிப்பிழப்பால் என்ன நன்மை கிடைத்தது என்று தெரியவில்லை. எனக்கு செய்திதாள் படிக்கும் பழக்கம் கிடையாது. ஆரம்பத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் தான் கிடைத்தது. அதற்கு சில்லறை மாற்ற முடியாமல் அவதிப்பட்டேன். இதன் பின்னரை மற்ற ரூபாய் நோட்டுக்களை வங்கி அதிகாரிகள் வழங்க தொடங்கினர்’’ என்றார்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற இவர் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து குர்கான் பகுதியில் குடியேறினார். 1971ம் ஆண்டு நடந்த இந்தியா&பாகிஸ்தான் போரில் இவர் சண்டையிட்டுள்ளார். லால் மாதந்தோறும் ரூ. 19 ஆயிரம் பென்சனை வங்கியில் இருந்து எடுக்க ஆட்டோ மூலம் குர்கான் பகுதியில் இருந்து சென்று வருகிறார்.

பீம்நகரில் 10க்கு 10 அகலம் கொண்ட ஒரு சிறிய அறையில் மட்டுமே தங்கியுள்ளார். புகைப்படம் வெளியான பிறகு வங்கி அதிகாரிகள் இவரை வரிசையில் காத்திருக்க செய்யாமல் உடனடியாக பென்சனை கொடுத்து வருகின்றனர்.