சென்னை:

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு  மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று மாணவர் விடுதியின் மாடியிலிருந்து விழுந்து ஜார்கண்ட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில்  தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான பச்சமுத்துக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைழக்கம் சென்னை அருகே உள்ள  காட்டாங்குளத்தூரில்  பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பொறியியல், மருத்துவம் உள்பட அனைத்து வகையான படிப்புகள் மட்டுமின்றி மிகப்பெரிய மருத்துவமனையும் அமைந்துள்ளது.

நேற்று மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் செளத்ரி என்ற மாணவர், ஈ.சி.ஈ. முதலாம்ண்டு இன்று  தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதியில் தங்கி படித்து வந்த அவர் இன்று காலை, 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அனுஷ் செளத்ரி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பொன்னேரியை சேர்ந்த பிடெக் 3ஆம் ஆண்டு மாணவி அனுப்பிரியா, கல்லூரியின் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை செய்து கொண்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் தற்கொலைகள் மறைக்கப்படுவதாக குற்றச்சசாட்டுக்கள் வெளியாகி வருகின்றன.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சுமார் 60  வரை வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகளே கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக பெரும் தொழிலதிபர்கள், அரசியல் வாதிகளின் குழந்தைகளே அங்கே படித்து வருகின்றனர்.  அவர்கள் தங்குவதற்காக ஏற்ப வசதி யான விடுதிகளை பல்கலைக்கழகம் அமைத்து கொடுத்துள்ளது. அதுபோல பல்கலைக்கழக வளாகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களும், மது வகைகளும் நடமாடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன.

அதுபோல, பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலைகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பல மாணவ மாணவிகள் தற்கொலை முடிவை நாடியுள்ள நிலையில், நேற்று மாணவி ஒருவர், இன்று மாணவர் ஒருவர் தொடர்ந்து தற்கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவ, மாணவிகள் அவ்வப்போது, இதுபோன்ற  விபரீத முடிவுகளை எடுக்க என்ன காரணம்? என்பது குறித்து காவல்துறையினரோ, பல்கலைக்கழக நிர்வாகவோ இதுவரை  ளிப்படையாக எந்தவொரு தகவலும் தெரிவிப்பதில்லை.

தற்கொலை குறித்து விசாரணை நடத்தும் மறைமலைநகர் போலீசார், உண்மையையும் தெரி விப்பது இல்லை. மாணவ மாணவிகள் உண்மையிலேயே தற்கொலை செய்கிறார்களா, அல்லது கொலை செய்யப்படுகிறார்களோ, அவர்கள் தற்கொலை செய்ய காரணம் என்ன? படிப்பு காரணமாக அல்லது வேறு தும் காரணமா? என்பது குறித்தும் காவல்துறையினர் தகவல் தெரிவிப்பது இல்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற தற்கொலைகள் மர்மமாகவே இருப்பதாகவும்  குற்றம் சாட்டப்படுகிறது.