சென்னை: திராவிட முன்னேற்றக்கழகம்,  இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. இதில் பல்வேறு தகிடுத்தத்தங்களும் நடை பெற்று வருவது அம்பலமாகி உள்ளது.  சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் திமுக உறுப்பினராக இணையதள உறுப்பினர் கார்டு வெளியான நிலையில், தற்போது, தமிழக முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு, திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.

2021 தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் திமுக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி பகுதியாக,  “எல்லோரும் நம்முடன்.”. “வாருங்கள் திமுகவில் இணையலாம்” என்ற இணைய தள அமைப்பு மூலம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

இணையதளம் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் உறுப்பினராக சேர்வதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நிலையில்,  இணைய தளம் தொடங்கிய 3 நாட்களில் ஒரு லட்சம் பேர் சேர்ந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். தற்போது 6 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தம்பட்டம் அடித்துள்ளார்.

ஆனால், இணையதள உறுப்பினர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஒரே நபரே பல உறுப்பினர் கார்டு பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.  இணைய தளத்தின் மூலம் திமுக உறுப்பினராக இணைவதற்கு கைபேசி எண் இருந்தால் போதும். அதில் வரும் ‘ஓடிபி’ நம்பர் மூலம் விவரங்களைப் பெற்று திமுகவில் இணந்ததற்கான உறுப்பினர் அட்டையும் வழங்கி வருகிறார்கள்.

தற்போதைய சூழலில் எந்தவொரு நபரும் ஒரு மொபைல் நம்பர் வைத்திருப்பது இல்லை என்பது நாடறிந்த விஷயம். ஒன்றுக்கு மேற்பட்ட எண்களுடன் பலர் உள்ள நிலையில், ஒடிபி மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில்,  திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க அழகிரியின் பெயரில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது பெரிதாக பேசப்பட்டது. ஆனால் இது உண்மையா என்பதை திமுக தலைமையும் தெளிவுபடுத்தவில்லை. அதுபோல,   அமெரிக்க அதிபர்  ‘ டொனால்ட் டிரம்ப்’ பெயரில் அவரது புகைப்படத்துடன் கூடிய திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. கடந்த 19-09-2020 ல் அவர் திமுகவில் சேர்ந்ததாக அட்டையில் தெரிவிக்கப்பட்டது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில்,  கடந்த 20-09-2020ல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவில் இணைந்ததாக உறுப்பினர் அட்டை வழங்கியுள்ளனர். அவரது தந்தை பெயர் கருப்பசாமி எனவும் 66 வயதான அவர் சேலம் எடப்பாடியைச் சேர்ந்தவர் எனவும் அதில் பதிவாகியுள்ளது.

திமுக இணையதள உறுப்பினர் அட்டை பெறுவதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதும், முதல்வர் எடப்பாடி பெயரில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற தவறுகளை களைய திமுக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையேல், திமுக உறுப்பினர் சேர்க்கை மோசடியானது என்று பொதுமக்களால் கருதப்படும் அவலம் ஏற்பட்டு விடும்… ஆவன செய்யுமா திமுக தலைமை…