சென்னை:
நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று தொடங்குகிறது என்று தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் தனுஷ்,  மேட்டூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார்.  மருத்துவராக வேண்டும் என்ற கனவிலிருந்த அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை தனது நண்பர்களிடம் நீட் தேர்வில் மூன்றாவது முறையும் தேர்ச்சி பெறாவிட்டால் தனது மருத்துவர் கனவு கலைந்து போகும் என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை அவரது தாயார் சிவஜோதி எழுந்து பார்த்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனுஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ள  தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வு அச்சத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றப்படும்  என்றும், இதனை இந்திய துணைக்கண்டத்தின் பிரச்சினையாகக் கருதி அணைத்து மாநில முதல்வர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.
நீட் தேர்வு ரத்து குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் கூட குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.