டெல்லி: ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செல்லாது என்று அறிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், அதற்குள் இணைக்காதவர்கள் இணைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1000 அபராதத்துடன் இணைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு மார்ச் 31-ந்தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 31ந்தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி செயல் இழக்கும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்து உள்ளது.
அதாவது இணைப்பதற்கு விலக்கு அளிக்கப்படும் வகையின் கீழ் வரும் பான்கார்டு வைத்திருப்பவர்களை தவிர மற்ற அனைவரும் 31-ந்தேதிக்குள் பான்கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்றும், இணைக்கா விட்டால் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அந்த கார்டுகள் செயல் இழக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இணைப்பதற்கான விலக்கு என்பது 1961-ம் ஆண்டின் வருமான வரிச்சட்டத்தின் கீழ் அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா போன்ற மாநிலங்களில் வசிக்கும் தனிநபர்கள், 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இந்தியர் அல்லாதோர் என குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்படுகிறது.
பான்கார்டு செயல் இழந்து விட்டால் அவர்களால் வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை திரும்பப்பெற முடியாது, பணத்தை திரும்ப பெறக்கோரி விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.