சென்னை:
ஈசா மையத்தின் மீது தொடர்ந்து வெளியாகும் புகார்களில், அரசு நிர்வாகத்தின் பலதுறைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆகவே பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் வல்லுனர்கள் உள்ளடக்கிய குழு விசாரணை மேற்கொள்ள
வேண்டும்” என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி வலியுறுத்தி உள்ளார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி, ஈசா மையத்தின் மீதான புகார்கள் குறித்து தெரிவித்ததாவது:

“பிரபல சாமியார் ஜக்கிவாசுதேவ், கோவையில் வெள்ளியங்கிரி மலையில் நடத்திவரும் ஈசா யோகா மையத்தின் மீது பல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கட்டிட விதிமுறை மீறல், யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, விதி மீறிய கட்டிடங்களுக்கு தடையில்லா மின்சாரம், கல்வி கட்டணத்தில் முறைகேடு, இளைஞர்களை மூளைச்சலவை செய்வது, பள்ளிக் குழந்தைகளை சித்திரவதை செய்வது, அனுமதி இன்றி பள்ளி நடத்துவது என்று வரும் பல புகார்களில் அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.
ஈசா வளாகத்தில் பல கட்டங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதால் இவற்றை இடிக்க வேண்டும் என்று 2013 ஆம் ஆண்டே நகர் ஊரமைப்பு துறை உத்தரவிட்டும் அவை இன்னும் இடிக்கப்படாதது ஏன்?
தமிழக அரசும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?
பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, மனநல மருத்துவர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், கல்வியாளர், குழந்தைகள் நலஉரிமை ஆணையத்தின் உறுப்பினர், சூழலியல் செயல்பாட்டாளர், பெண்கள் நல அமைப்பினர் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட விசாரணை குழு ஒன்றை அமைத்து விசாரித்து ஈசா மையம் பற்றிய முழு உண்மையை வெளிக்கொணர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உ.வாசுகி தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்த பிரச்சனைக்கு சில இந்துத்துவா அமைப்புகள் மதச்சாயம் பூசி வருவதாக கூறிய அவர் காருண்யா பல்கலைக்கழகத்தின் விதிமீறல் குறித்தும் நாங்கள் பேசுகிறோம்” என்றார்.
Patrikai.com official YouTube Channel