பாஜகவோடு சேர்ந்து, பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது – கோ.க.மணி அவதூறுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்

Must read

சென்னை: 
பாஜகவோடு சேர்ந்து பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என, பாமக தலைவர் ஜி.கே.மணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

“மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் வழக்கு தொடுத்துள்ள போது, பாமக மட்டும் 27 சதவீத இட ஒதுக்கீடு போதும் என மனு செய்திருப்பது ஏன்?, இது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக் கொடுப்பது ஆகாதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேள்வி எழுப்பியிருந்தோம்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாமக தலைவர் ஜி.கே.மணி விரிவான அறிக்கையை அளித்திருக்கிறார். ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போலத் தான்’ அவருடைய பதில் அறிக்கை அமைந்துள்ளது. பாமக அளித்துள்ள விளக்கங்கள் நீதிமன்றத்தில் பாஜக அரசின் வாக்குமூலத்திற்கு வக்காலத்து வாங்குவதைப் போல உள்ளது வேதனையளிக்கிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அன்புமணி கடிதம் எழுதியதாகவும், அதற்கு பதில் எழுதிய மத்திய அமைச்சர், சலோனி குமார் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தினால்தான் இட ஒதுக்கீடு வழங்க முடியவில்லை என பதில் எழுதியுள்ளதாகவும், இதனால் தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் தனது அறிக்கையில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இந்த இட்டுக்கட்டிய கதையை எப்படி ஏற்றுக்கொள்வது? ஒருவேளை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுதியது உண்மையெனில், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி என்ன செய்திருக்க வேண்டும்? சலோனிகுமார் வழக்குக்கும், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு வழங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடவேண்டாம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனை இடித்துரைத்திருக்க வேண்டாமா?.

சலோனிகுமார் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீடு தொடர்பான வழக்கையும் மையமாகக்கொண்டு டி.கே.பாபு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 13.07.2020 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமார் வழக்குக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உயர் நீதிமன்றமே விசாரித்து உரிய தீர்ப்புகளை வழங்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்த சாதாரண விஷயம் கூட தெரியாமல் மத்திய அமைச்சர் கூறினார் என்பதால் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான அன்புமணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாராம். அவர் ஒன்றும் ‘அமுல் பேபி’ அல்லவே!.

மேலும் 27 சதவீத இடஒதுக்கீடு வழக்கினை அன்புமணி தாக்கல் செய்துள்ளதாகவும், தமிழக அரசும் பிரதான எதிர்க்கட்சிகளும் 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த காரணத்தால் ஆத்திரமடைந்து நீதிபதிகள் இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர் என்றும், இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், அன்புமணி கோரிய அடிப்படையில் 27 சதவீத இட ஒதுக்கீடு இந்நேரம் கிடைத்திருக்கும் என கூறியுள்ளார்.

ஏதோ எதிர்க்கட்சிகள் வழக்கு தாக்கல் செய்த காரணத்தால்தான் இட ஒதுக்கீடு பெற முடியாமல் போனதாக ஒரு குண்டை தூக்கிப்போட்டுள்ளார். உண்மை என்னவெனில், சலோனிகுமார் என்பவர் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமலாக்க வேண்டுமென கடந்த 2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது. இன்னமும் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்து முடிக்கவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க எதிர்க்கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்த காரணத்தால்தான் இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என அபாண்டமாக அறிக்கை விடுவது நியாயமா?.

1998 முதல் 2009 ஆம் ஆண்டு வரை சுமார் 11 ஆண்டுகள் பாமக சார்பில் தலித் எழில்மலை, என்.டி.சண்முகம், அன்புமணி ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளனர். அதிலும் அன்புமணி மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார். ஜி.கே.மணி நீட்டி முழக்கி அறிக்கை விடுவதற்கு மாறாக மத்திய அமைச்சரவையில் பாமகவினரும், அன்புமணியும் இடம் பெற்றிருந்த காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத்தர என்ன நடவடிக்கையை மேற்கொண்டனர் என ஒரே வார்த்தையில் சொல்லி இருக்கலாம். ஆனால், அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு தமிழகத்திற்கு தேவையான இடஒதுக்கீட்டை பெற்றிருக்க முடியும். இந்த காலம் முழுவதும் பாமகவினர் மத்திய அமைச்சர் பதவி சுகத்தை அனுபவித்தனரே தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தர சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை.

அதிகாரத்தில் இருந்த போது இதை செய்ய மறுத்துவிட்டு, இப்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இட ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாகக் கூறுவது அழகல்லவே!

இத்தோடு நின்றாலும் பரவாயில்லை, மேலும் ஒருபடி சென்று 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அன்புமணி மத்திய அமைச்சரவையில் இல்லை, இருந்திருப்பாரேயானால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்திருப்பார் என கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் கூறியுள்ளார். பதவியில் இருந்தபோது அன்புமணி அதைச் செய்யத் தவறிவிட்டார் என்று மறைமுகமாக இடித்துக்காட்டியுள்ளார் போலும்.

அபயநாத் வழக்கு விசாரனைக்கு வந்தபோது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியின் ஆலோசனையின் அடிப்படையில்தான் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என சுகாதாரத் துறையின் சார்பில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்ததாகவும், இதை ஏற்றுக்கொண்டுதான் உச்ச நீதிமன்றம் இம்மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பு வழங்கியதாகவும் போகிற போக்கில் ஜி.கே.மணி அள்ளிவிட்டுள்ளார்.

மத்திய நிறுவனங்களில் இடஒதுக்கீடு சட்டத்தை 2006 ஆம் ஆண்டே மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது. இந்த அடிப்படையில்தான் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென அபயநாத் வழக்குத் தொடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மத்திய அரசு இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றிய பிறகு நீதிமன்றத்தில் அதன் அடிப்படையில்தான் வாக்குமூலம் அளித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் அன்புமணியின் தனிப்பட்ட செல்வாக்கு ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

வாதத்திற்காக அன்புமணியின் செல்வாக்கினால்தான் மத்திய சுகாதாரத்துறை மேற்கண்ட வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்றால், அதே சுகாதாரத்துறையின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என வாக்குமூலம் தாக்கல் செய்ய அன்புமணி பணித்திருக்கலாமே. அவ்வாறு செய்திருந்தால் பிரச்சினை அன்றே முடிவுக்கு வந்திருக்குமே! ஏன் இதைச் செய்யவில்லை என்ற உண்மையை இப்போதாவது ஜி.கே.மணி விளக்க வேண்டும்.

ஜி.கே.மணி தனது அறிக்கையில் இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்ட அடிப்படையில்தான் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அகில இந்திய ஒதுக்கீடு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுவதால், மத்திய அரசு இடஒதுக்கீடு சட்டத்தின்படியாக 27 சதவீத இட ஒதுக்கீட்டைதான் வழங்க முடியும் எனவும், நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவான வகையில் அன்புமணி சார்பில் 27 சதவீத இடஒதுக்கீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாவம், ஜி.கே.மணி, தமிழ்நாட்டின் போராட்டப் பாரம்பரியத்தை மறந்துவிட்டார். 1950-களில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இடஒதுக்கீட்டு கோட்பாடினை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என தீர்ப்பு வழங்கிய போது அதை எதிர்த்துப்போராடி இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தினை நிறைவேற்ற வைத்த பெருமை தமிழகத்திற்கு உண்டு.

அத்தகைய பாரம்பரியத்தை மறந்துவிட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக கோரிக்கை வைத்துள்ளோம் என்பது நமது சமூக நீதி பாரம்பரியத்திற்கு விரோதமானது என்பதை விளக்கத் தேவையில்லை.

அதுமட்டுமின்றி, மக்களின் நியாயங்களை எடுத்துச் சொல்லி நீதிமன்றங்களை ஏற்க வைப்பதுதான் அரசியல் கட்சிகளின் பணியே தவிர, நீதிமன்றங்கள் ஏற்பதற்கு ஏதுவாக மக்களின் உரிமையை விட்டுக்கொடுப்பதல்ல என்பதையாவது அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஒரு பகுதி இடங்களையும், மாநில அரசுகள் மூலம் ஒரு பகுதி இடங்களையும் பெற்று அகில இந்திய ஒதுக்கீடு உருவாக்கப்படுகிறது என்பதை ஜி.கே.மணி சரியாக விளக்கி உள்ளார்.

ஆனால், இந்த அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் முழுவதையும் மத்திய அரசே நிர்வகிப்பதாக கூறி குழப்பி உள்ளார், அது உண்மையல்ல. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மாணவர்களை தேர்வு செய்யும் பணியை மட்டுமே அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மேற்கொள்கிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயில்கின்றனர்.

உதாரணமாக, தமிழகத்திலிருந்து மத்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படும் இடங்களில் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில்தான் படிக்கின்றனர். இவர்களுக்கான மருத்துவப் படிப்பு, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. இதில் மத்திய அரசோ, மத்திய சுகாதாரத்துறையோ எந்த பொறுப்பையும் நிறைவேற்றுவதில்லை.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் படி இடஒதுக்கீடு அமலாக்கப்படுகிறது. மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்டு உருவாக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு கொள்கையே அமலாக்க வேண்டும் என்பதே பொருத்தமாகும்.

அபய்நாத் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் குல்ஷ்ன் பிரகாஷ் எதிர் ஹரியானா அரசு வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பில் பாரா 9-ல் மிகத்தெளிவாக இது விளக்கப்பட்டுள்ளது.

அதாவது, அபய்நாத் வழக்கில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடானது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என திட்டவட்டமாக தெரிவித்ததோடு, இதை மாநில அரசு இடங்களுக்கு விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

எனவே, மத்திய அரசு மத்திய கல்வி நிறுவனங்களுக்கு பொருத்தமான இடஒதுக்கீட்டுக் கொள்கையை மாநில அரசுகள் ஒதுக்கும் இடங்களுக்கும் பொருத்திடக் கோருவது இந்த தீர்ப்புக்கு விரோதமானதாகும்.

மேலும், 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் 5(4)9(7) விதிகளின்படியும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையை அமலாக்கிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

இந்த விதியில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் மாநிலங்களுக்கான இடங்கள் என எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. இந்த விதி மாநிலங்களில் சேர்க்கப்படும் மாணவர்களுக்குத்தான் பொருந்தும், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்குப் பொருந்தாது என ஜி.கே.மணி குறிப்பிட்டிருப்பது பாமகவின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.

இந்த தவறான வியாக்கியானத்தின் காரணமாகத்தான் பட்டியலின மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாறாக 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய இட ஒதுக்கீடு சட்டத்தை மாநிலங்கள் வழங்கும் இடங்களுக்கு விஸ்தரித்ததன் விளைவாகும் இது.

இதனை சீர்தூக்கி பார்க்கையில் பாஜக அரசின் வாதங்களை அப்படியே பாமக சொல்வது கூட்டணி தர்மத்தில் விளைந்த விசுவாசப் போக்கின் விளைவாகும். மேலும், அகில இந்திய தொகுப்புக்கு தமிழ்நாடு மருத்துவப் படிப்புக்கான இடங்களை வழங்கவில்லையெனில் அந்த இட ஒதுக்கீட்டுக்கும் தமிழ்நாடு இடஒதுக்கீட்டின்படி ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பலன் பெற முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்களை வழங்கிவிட்டதாலேயே நமது இடஒதுக்கீட்டு உரிமையையும் பறிகொடுப்பதற்கு பாமக வக்காலத்து வாங்கி துணைபோவது ஏன்?.

மத்திய அரசோ, நீதிமன்றங்களோ அப்படி கட்டாயப்படுத்தினால் அதை எதிர்த்து தமிழக மாணவர்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பதுதானே நியாயம்? இவ்வாறு செய்வது அறியாமை எனக் கூறும் ஜி.கே.மணி நமது உரிமைகளை விட்டுக்கொடுத்து பாஜகவின் வர்ணாசிரமக் கோட்பாட்டுக்குக் காவடி தூக்குவதுதான் அதிபுத்திசாலித்தனம் என்கிறாரா?.

நாங்கள் எழுப்பியுள்ள அழுத்தமான கேள்விகளுக்கு முறையான பதில் சொல்ல வழியின்றி ஜி.கே.மணி ஆத்திரம் மேலிட அவதூறு புழுதிவாரி தூற்றியுள்ளார். அவருக்கு பதில் சொல்ல முடியும் என்றாலும் இந்த விவாதத்தை திசைத்திருப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை.

ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். கூட்டணிக்காகவோ அல்லது தேர்தல் வெற்றிக்காகவோ கொள்கையற்ற நிலையினை மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் எடுத்ததில்லை என தெரிவித்துக்கொள்கிறோம். ஒருவேளை இதுபற்றி தனியாக விவாதிக்க வேண்டுமென்றாலும் அதற்கும் எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி தயாராகவே உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை குறித்த தீர்ப்பு ஜூலை 27 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு வழங்கும் இடங்களில் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின்படி ஓபிசி 50 சதவீதம், எஸ்.சி.18 சதவீதம், எஸ்.டி. 1 சதவீதம் என வழங்கிட வேண்டுமென பிரதான அரசியல் கட்சிகள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் வழக்கறிஞர்கள் தங்களது அறிவார்ந்த வாதங்களையும், ஆதாரங்களையும் எடுத்து வைத்துள்ளனர்.

இவர்களோடு பாமகவும் சேர்ந்திருந்தால் இந்த குரலுக்கு மேலும் வலுச் சேர்ந்திருக்கும். ஆனால், பாஜகவோடு சேர்ந்து பாமகவும் கூட்டணிக் கச்சேரி நடத்துவது வழக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே தமிழக மக்களின் கவலையாகும்”

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article