சென்னை:
வரி ஏய்ப்பு வழக்கை தங்களது கவனத்துக்கு வராமல் நீதிமன்றம் விசாரிப்பது தவறான முன்னுதாரணம் என வருமானவரித்துறை தாக்கல் செய்த மனுவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநில அரசின் சத்துணவு திட்டத்துக்கு மளிகைப் பொருட்களை சப்ளை செய்யும் திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஸ்டி ஃரைடு க்ராம் நிறுவனம் மீது வருமான வரித்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதே மாதிரியான இன்னும் சில வழக்குகளை நீதிபதி டீ ராஜா விசாரித்து வருகிறார்.
அனைத்து வரி ஏய்ப்பு வழக்குகளும் தினசரி நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
இந்நிலையில் வருமானவரித்துறை முதன்மை இயக்குனர் தாக்கல் செய்த மனுவில், வருமான வரித்துறையின் கவனத்துக்கு வராமலேயே இந்த வழக்கு இறுதி விசாரணையை எட்டியுள்ளது. இது தவறான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி ராஜா, கடந்த மூன்று மாதங்களில் 5,027 வழக்குகளை பைசல் செய்திருப்பதாகவும், வருமானவரித்துறை தாக்கல் செய்த மனு தவறானது என்றார்.
இந்திய வருவாய்த்துறை அதிகாரி இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. வழக்கு தாமதம் காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு இழப்பு ஏற்படக்கூடாது என்பதால்தான் வழக்கை விரைந்து நடத்துகிறோம்.
கிறிஸ்டி ஃப்ரைடு க்ராம் நிறுவன கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நிறுவன உரிமையாளர் குமாரசாமி சட்டவிரோத காவலில் வருமானவரித்துறையினர் வைத்திருந்தது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
இந்நிலையில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய மனுவை வருமானவரித்துறை தாக்கல் செய்துள்ளது நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்கிறேன். நான் விசாரிக்க வேண்டுமா? அல்லது வேறு நீதிபதி விசாரிக்க வேண்டுமா ?என்பதை அவர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.
வருமானவரித் துறை சார்பாக இந்த மனுவை தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் பி. எஸ் . ராமன், சதீஷ் பராசரன் மற்றும் இந்த வழக்கில் ஆஜராக வந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி. ராஜகோபாலன் ஆகியோர், இந்த மனுவை வாபஸ் பெற முதன்மை வருவாய்த்துறை அதிகாரி தயாராக இருக்கிறார். நீங்கள் வழக்கை தொடர்ந்து நடத்துங்கள் என்றனர்.
எனினும் இதனை ஏற்க மறுத்த நீதிபதி ராஜா, வருமான வரித்துறை வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.