டெல்லி:  ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி உயர்வு ஒத்திவைக்க  நடைபெற்ற 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12% ஆக உயர்த்தாமல் 5% ஆக தொடர முடிவு செய்துள்ளதாக நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லி விக்யான் பவனில் இன்று காலை 11 மணிக்கு  நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், மற்றும்  மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி, டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத் ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். மேலும், மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தம் தொடர்பான மாநில அமைச்சர்கள் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் 17 அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி மற்றும் காலணி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள வணிகர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அடுத்த சில மாதங்களில் 5 மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால், ஜிஎஸ்டி வரி உயர்வை அமல்படுத்துவது குறித்து  விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம்,டெல்லி, ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்கள் ஜவுளி பொருட்கள் மீதான அதிக வரி விகிதத்தை,கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.  12 சதவீதமாக உயர்த்தப்பட்டதை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து,  ஜவுளி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைப்பதாக கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கூறிய இமாச்சலப் பிரதேச தொழில்துறை அமைச்சர் பிக்ரம் சிங், இந்த விசயம்  தொடர்பாக பிப்ரவரி 2022 இல் கவுன்சில் அதன் அடுத்த கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமனும் கூறியிருக்கிறார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12% ஆக உயர்த்தாமல் 5% ஆக தொடர முடிவு செய்துள்ளது.  ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு வரி விகிதப் பகுத்தறிவுக் குழுவுக்கு பிப்ரவரிக்குள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.