சென்னை,

இன்று தமிழக கவர்னரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆளுநரிடம் அரசு ‘பெரும்பான்மை’யை நிரூபிக்க உத்தரவிட கோரிக்கை வைத்தனர். ஆனால், கவர்னர் அவர்களது கோரிக்கையை நிராகரித்தார்.

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழலில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தற்போதைய தமிழக அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறி வருகின்றன.

ஏற்கனவே டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில், திமுகவினரும் கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை தமிழக எதிர்க்கட்சிகளின் தலைவர்களான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக ஆளுநரைச் சந்தித்தனர்.

‘அப்போது, எடப்பாடி அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகை எதிரே ரோட்டோரத்தில்  செய்தி யாளர்களை கூட்டாக சந்தித்த அவர்கள்,  “பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று  ஆளுநரிடம்  கோரிக்கை வைத்தோம்.

ஆனால், ‘தற்போதைய சூழலில் இந்த விவகாரத்தில் சட்டப்படி தலையிட முடியாது. என்னால் இதில் எந்த நட வடிக்கையும் எடுக்க முடியாது. 19 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-விலிருந்து விலகினால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

இரு குழுக்களாகப் பிரிந்துள்ள நிலையில், கட்சி விவகாரத்தில் நான் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறினார்.

ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியுள்ளதால், அடுத்தகட்டமாக ஜனாதிபதியைச் சந்தித்து முறையிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.