காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதே முதல் பணி: தமிழக காங்கிரஸ் தலைவர் முதல் பேட்டி

Must read

சென்னை:

மிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மக்களிடம், இளைஞர்களிடம்  கொண்டு செல்வதே தனது முதல் பணி என்று முதன்மதலாக செய்தியாளர்களின் சந்திப்பின்போது தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2ந்தேதி நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் உள்பட மாற்று கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களை அவர்களது இல்லத்துக்கு சென்று சந்தித்து கே.எஸ்.அழகிரி ஆசி பெற்று வருகிறார்.  நேற்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த தலைவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்தார்.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு முதன்முறையாக செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் எளிய தொண்டனாக இருந்த என்னை இவ்வளவு பெரிய இடத்தில் அமரவைத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தொடங்கியவர், தன்னை இந்த பதவிக்கு உயர்த்த உறுதுணையாக  இருந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக், தமிழக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

தனது முதல் பணி,  காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் கொண்டு செல்வதுதான் என்றவர்,  அனைவருடைய ஒத்துழைப்போடு தமிழகத்தில் அமைப்பு ரீதியாக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பாடுபடுவேன் என்றார்.

ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி,  நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றார்,  அதேபோல் இப்போது ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார். அதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற பணியாற்றுவதே எங்கள் கடமை என்றவர்,  இந்தியா முழுவதும் அமைப்பு ரீதியாக தலைவர் மற்றும் செயல் தலைவர்கள் என்ற பொறுப்புகளை பல மாநிலங்களில் ராகுல்காந்தி ஏற்படுத்தி வருகிறார். அதேபோலத்தான் தமிழகத்திலும் ஏற்படுத்தியுள்ளார். வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று விளக்கினார்.

மேலும்,  காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் என்பது தவறு. கருத்து வேறுபாடுகள் ஜனநாயக முறையில் செயல்படும் எல்லா கட்சிகளிலும் இருக்கத்தான் செய்யும். அதை கோஷ்டி பூசல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எங்களை பொறுத்தவரை கூட்டுத் தலைமை, கூட்டு முயற்சியின் மூலம் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

More articles

Latest article