அத்திவரதரை விவிஐபி வரிசையில் தரிசித்த பிரபல ரவுடி! பொதுமக்கள் அதிர்ச்சி…..(வீடியோ)

Must read

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அத்திவரதரை பிரபல ரவுடி ஒருவர் தனது குடும்பத்தினருடன்  வந்து விவிஐபி தரிசனம் செய்ததும், அவருக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாதாரண மக்கள் பல மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வரும்வேளையில், பிரபல ரவுடியான மதுரையைச் சேர்ந்த  வரிச்சூர் செல்வம்  விவிஐபி வரிசையில் தனது அடியாட்கள் பட்டாளத்துடன் வந்து அத்திவரதரை சிறப்புத் தரிசனம் செய்த காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரவுடி  வரிச்சியூர் செல்வம் என்றாலே  கழுத்து நிறைய தங்கச்செயின்களுடன் அவர் நடமாடும் உருவம்தான் நமக்கு நினைவுக்கு வரும். தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகளில் இவரும் ஒருவர். இவர்மீது ஏராளமான கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை காவல்துறையினர் பலமுறை என்கவுண்டர் செய்ய முயற்சி செய்ததும், அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவுடன் தப்பி வந்ததும் அனைவரும் அறிந்ததே.

இப்பேர்பட்ட குற்றவாளியான  ரவுடி வரிச்சூர் செல்வம், ஆட்சியர் அனுமதிப் பெற்று, காவல் துறையினரின் பலத்தப் பாதுகாப்புடன் விவிஐபி அந்தஸ்துடன்  கோவிலுக்குள் வந்து அத்திவரதர் அருகே அமர்ந்து தரிசனம் செய்த காட்சி மக்களிடையே வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக விவிஐபிக்கள் வரிசையில் முக்கியத் தலைவர்கள் மட்டுமே வருவது வழக்கம். அந்த வழியாக ரவுடி ஒருவர் சாமி தரிசனம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரவுடி வரிச்சூர் செல்வம் விவிஐபி வரிசையில் வர அனுமதி வழங்கியது யார்?, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு ரவுடி சர்வசாதாரணமாக நடமாடியதை காவல்துறையினர் பார்த்தும், அவரை கைது செய்யாதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்

தினசரி லட்சக்கணக்கான பேர் பல மணி நேரம் அவதிப்பட்டு, அல்லல்பட்டு,  காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து செல்லும் வேளையில், ரவுடி ஒருவர் ஸ்பெஷல் தரிசனம் செய்துள்ளது ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.

வரிச்சூர் செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்த வீடியோ…

More articles

Latest article