சென்னை: தமிழக ஆளுநர் மாளிகையில் நாளை (மே 7), முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். அவரது அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. திமுக அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பது தொடர்பாக தீவிர விவாதம் நடைபெற்று, பட்டியலும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவையில் 6 பெண்கள் உள்பட மூத்த நிர்வாகிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், புதிய முகங்களுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு நீர் பாசனம், திமுக முதன்மை செயலாளர் கே.என். நேருவுக்கு உள்ளாட்சி துறை, பொன்முடிக்கு உயர் கல்வித்துறை, வேலுவுக்கு பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத்துறை உள்பட பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.மேலும் கலைஞர் அமைச்சரவையில் இடம்பெற்ற கீதாஜீவன், தமிழரசி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கபட இருப்பதாகவும், மேலும் சமூக ரீதியாகவும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அதிமுகவில் இருந்து திமுவுக்கு தாவிய ஈரோடு முத்துசாமி உள்பட திமுக இளைஞரணியைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா, அன்பில்மகேஷ் உள்பட சில புதுமுகங்களும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவைக்கான பட்டியலை கவர்னரின் பார்வைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்து விட்டதாகவும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பெயர் பட்டியல் கவர்னர் மாளிகையில் இருந்து இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.