சென்னை: தமிழக முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக, பதவி ஏற்பு விழாவை வீடுகளில் இருந்தே கண்டுகளியுங்கள்  என திமுக தலைவர்  ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
உடன்பிறப்புகளின் அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சரானாலும், உங்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லையே என்ற கவலை உள்ளது. உடன்பிறப்புகளின் நலனே முக்கியம்! எளிய விழாவினை வீடுகளில் இருந்தே கண்டுகளியுங்கள்; உடல் அங்கே என்றாலும் உங்கள் உள்ளம் சென்னையில்தான் என்பதை அறிவேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதில், திமுக மீது நம்பிக்கை மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கயிருக்கிறது. உடன்பிறப்புகள் அயராத உழைப்பால் இந்த வெற்றி கிட்டியது.

உடல்நலம் முக்கியம் என்பதால் பதவியேற்பு விழாவுக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பெருந்தொற்று பேரலையாக வீசுவதால் மக்கள் கூடும் மாபெரும் விழா நடத்த இயலாது. அதனால் தான் எளிமையாக பதவியேற்பு விழா நடத்த வேண்டியுள்ளது. திமுகவின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் முன்னிலையில் பதவியேற்க முடியவில்லை என்பது எனக்கும் கவலை அளிக்கிறது.

கட்சி தொண்டர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கி முதல்வராக பதவியேற்க தயாராகி வருகிறேன். மக்கள் அனைவரும் சம உரிமையும், கடமையும் உடைய உயர்வான தமிழகத்தை உருவாக்கிடுவோம். மேலும், எளிய விழாவினை வீடுகளில் இருந்தே கண்டுகளியுங்கள், உடல் அங்கே என்றாலும் உங்கள் உள்ளம் சென்னையில்தான் என்பதை அறிவேன் என குறிப்பிட்டுள்ளார்.