சென்னை: கடந்த 2 நாட்களாக மிரட்டி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே அதிகாலை 4மணி அளவில் கரையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று 19 நவம்பர் 2021 அன்று அதிகாலை 0300-0400 மணிக்கு இடைப்பட  நேரத்தில் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே வட தமிழ்நாடு & அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளைக் கடந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை உள்பட பல இடங்களில் மழை குறைந்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.குறிப்பாக மீண்டும் மழை வெள்ளம் ஏற்படுமோ என்ற பயத்தில் வசித்து வந்த சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தாலும்,  சென்னை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மழை காரணமாக  அறிவிக்கப்பட்ட போக்குவரத்து மாற்றம்  விலக்கப்பட்டு உள்ளதாகவும்,  சென்னை மாநகராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்த 22 சுரங்கப்பாதைகளும், தண்ணீர் அகற்றப்பட்டு  பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி சென்னையில் இதுவரை 154 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணையில் இருந்து 50955 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதுபோல  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள பாலாறு தடுப்பணை நிரம்பி வழிகிறது. மேலும் பாலாற்றில் இருந்து வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் 98 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.