அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி விட்டது மத்தியஅரசு! வைகோ கண்டனம்

Must read

சென்னை:
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு என்று வைகோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
vaiko12
இன்று (3.10.2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது” என்றும் தெரிவித்து  இருக்கின்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டிய தேவை எதுவும் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியதையே உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து இருந்தது.
இத்தனை ஆண்டுகளாக இதுகுறித்து எதுவுமே தெரிவிக்காத மத்திய அரசு, இப்போது ஒரு புதிய காரணத்தைக் கண்டுபிடித்து இருக்கின்றது;
சட்டவிரோதமாகச் செயல்படும் கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க. துணைபோய்க் கொண்டு இருக்கிறது என்பதற்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவே ஆதாரம்.
மோடி அரசின் உள்நோக்கம்   வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
தமிழ்நாட்டுக்குச் சொட்டுத் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று கர்நாடகம் மார் தட்டுதற்கும், காவிரியின் குறுக்கே ராசிமணல், மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்டியே தீருவோம் என்று கொக்கரிப்பதற்கும் மோடி அரசின் ஆதரவுப் பின்புலம்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது.
உச்ச நீதிமன்றத்தையே மதிக்காத மோடி அரசு,  இந்திய அரசியல் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கி விட்டது. மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் நியாயத்தை உணர்ந்து நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது.
மோடி அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள பச்சைத் துரோகத்தைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராடியாக வேண்டும்.
தமிழக மக்களின் கொந்தளிப்பான மனநிலையைப் புரிந்துகொண்டு மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டு,  காவிரி மேலாண்மை வாரியத்தை உடடினயாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

More articles

Latest article