புளோரிடா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர்  வரும் 19ந்தேதி  பயணமாகிறார்கள் என நாசா அறிவித்துஉள்ளது. ஏற்கனவே ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 பயணம் 5 முறை தொழில்நுட்ப கோளாறுகளால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான  நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 விண்கலம்  திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, விண்வெளிக்கு செல்ல இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் தயாராக உள்ளனர்.

இவர்களை அழைத்துக்கொண்டு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல தயாராக இருந்தது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஏவப்படவிருந்த இந்த பயணம்,  பல முறை பல்வேறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

5வது முறையாக,  கடந்த (ஜுன்)  11ம் தேதி மாலை 5.30 மணிக்குப் புறப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர், வானிலை காரணமாக,  இவர்களின் பயணம் 12ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.  அன்றைய தினம் பால்கன் ராக்கெட்டை ஏவுவதற்கான   இறுதிக்கட்ட சோதனையின் போது ஃபால்கன் 9 ராக்கெட்டின் உந்துவிசை அமைப்பில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4  திட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டது.

இந்த நிலையில், தற்போது கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதால், குறிப்பிட்ட 4 பேருடன் ஃபால்கன் 9 ராக்கெட் வரும் 19ந்தேதி விண்ணுக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.