Tamil_News_large_1512535
கோடிக்கணக்கில் பணம் மற்றும் அரசு சின்னம், பெயரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக  குற்றம் சாட்டப்பட்ட அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு  மதுரை ஹைகோர்ட்  கிளை நிபந்தனையுடன் முன்ஜாமீன் அளித்துள்ளது.
கரூர் அருகேயுள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்த  அன்புநாதன்,  அதிமுக பிரமுகர். இவருக்குச் சொந்தமான இவரது குடோனில் வாக்காளர்களுக்கு அளிக்க கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  தேர்தல் பார்வையாளர் ஷில்ஆசிஸ், எஸ்.பி. வந்திதா பாண்டே, வருமான வரித் துறை இணை இயக்குநர் மணிகண்டன் தலைமையில் வருமான வரித் துறை அலுவலர்கள், பறக்கும் படையினர் சோதனை நடத்தினார்கள். இதில் 10,33,820 ரூபாய் ரொக்கம், 11 பணம் எண்ணும் இயந்திரங்கள், கள்ள நோட்டை கண்டறியும் இயந்திரம், நான்கு கார்கள், ஒரு டிராக்டர், ஒரு  ஆம்புலன்ஸ், வாக்காளர் பட்டியல் ஆகியன  பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து வருமான வரித்துறை இணை இயக்குநர் மணிகண்டன் தலைமையிலான வருமான வரித்துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர்  சோதனை நடத்தியதில்  அன்புநாதனின் வீட்டில் 4.77 கோடி ரூபாய்  ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அன்புநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவானார்.   இந்தநிலையில் அன்புநாதன் சார்பில், முன்ஜாமீன் கேட்டு மதுரை ஹை கோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் அளித்துள்ளது.