சீனாவின் கவுங்டொங் மாகாணத்தில் உள்ள சாஓசோவ் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த மாதம் 5 ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் Y மாடல் எலக்ட்ரிக் காரை ஓட்டிவந்த நபர் அதனை பார்க்கிங் செய்ய முயன்றபோது பிரேக் பிடிக்காமல் கார் வேகமெடுத்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் தாறுமாறாக ஓடியது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சைக்கிள் ஓட்டிவந்த பள்ளி மாணவி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் மீது மோதியதோடு சாலையில் மேலும் சில வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் சிறுமியும் இளைஞரும் உயிரிழந்தனர், இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கார் பிரேக் வேலை செய்யவில்லை என்றும் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காரின் தொழில்நுட்பம் செயலிழந்தை அடுத்து விபத்து நடந்ததாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டெஸ்லா நிறுவனம் பிரேக் செயலிழந்தது குறித்து தங்கள் மென்பொருளில் எந்த தகவலும் பதிவாகவில்லை என்றும் சி.சி.டி.வி. காட்சிகளில் காரின் பிரேக் பயன்படுத்தியபோது வாகனத்தின் பின் விளக்கு எரியவில்லை என்று கூறியது.
மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் பதிவெண் உள்ளிட்ட முழுவிவரங்கள் தெரிந்த பின் தான் மென்பொருள் செயலிழப்பு குறித்த தகவலை உறுதி செய்யமுடியும் என்றும் விசாரணையில் சீன போலீசாருக்கு உதவ டெஸ்லா நிறுவனம் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.